“காலமில்வெளிகளில் மெல்லக் கரைகையில் கரையமும் கரைப்பானும் காலமாகி விடுகின்றன. காலத்துடியிடையில் இடையறா இயங்கும் கருங்காந்தச் சுழலை வியக்கிறேன்”
“அறிவியல் தொடும் ஆழங்கள்
" என்சார்வெளிகளில் சில இடையறா இயங்கும் உரையாடல் வெளிகளை தன் முகிழ்வின் ஊடாக அறிமுகப்படுத்தியது.
அதுசார் விளைவுகளின் ஊடாக இந்த "அறிவியல் தொடும் ஆழங்கள்" எனும் எழுத்தியங்கியலுக்கான திறனாய்வு வெளி அதன் ஆழங்களைத் தேடும் அறிவியல்வெளி நோக்கிய பயணத்திற்கான கால்கோளாக அமையும் என நான் நம்புகிறேன்.
1.
கட்டுடைப்பும் பிரவாகமும்
இங்கே கூறப்படும்
"கட்டுடைப்பு" எனும் கருத்தாக்கம்
பின்னவீனத்துவ கோட்பாட்டாளர்களால் வலியுறுத்தப்பட்ட "மையங்களைத் தகர்த்தல்"
என்பது பற்றியதல்ல.
கட்டுடைப்பு என்பது வடிவங்களை - மரபுகளை- மீறி படைப்புகள் பேசுவது என்பதல்ல படைப்பாளன் தான் அநுபவித்தறிந்த உண்மையின் தரிசனத்தை எந்தவொரு கோட்பாடு-வடிவம்-மரபையும் மீறி சுயமாகத் தன் படைப்பின் ஊடாகப் பேசுதல். மு.பொன்னம்பலத்தின், இராகவனின் படைப்பு சார்பான திறானாய்வில் எடுத்தாளப்படும்
" வடிவங்களைக் கடந்த வடிவம்" என்ற கருத்தாக்கம் கட்டுடைப்பின் சுயம் பற்றியதே. அதாவது "வடிவங்களைக் கடந்த வடிவம்" என்பது "வடிவமில்
வடிவமே" - ஒரு படைப்பே அதன் வடிவமாதல்.
இதுவரைகால
நவீன தமிழ்ப் படைப்புலக இயக்கத்தில் படைப்புகள் எண்ணிக்கையில் உயர்ந்த அளவில் அவற்றின் சிந்தனை மட்டத்திலான வளர்ச்சி மிகவும்
வறட்சியானது. கோட்பாட்டுரீதியான புதிய வெளிகளுக்கான சிந்தனைகளை ,மு.தளையசிங்கம் என்ற சிந்தனையாளனைத்தவிர்த்துப் பார்த்தால் சூனியமாகவே இருக்கும்.ஆனால் தற்போது மரபுகளை மீறிய கட்டுடைப்பு தமிழ் இலக்கியப் பரப்பில் நுழையும் புதிய படைப்புலகப் போராளிகளால் அவர்களின் புதிய பார்வை,மையமில் சிந்தனை, உடைந்தியங்கும் நிலை-இல்-கோட்பாடுகள் என்பவற்றால் பிரவாகமெடுக்கிறது. இவற்றின் முளைகளை ஈழத்து,இந்திய,புலம்பெயர் இலக்கிய புதிய படைப்பாளிகளின் படைப்புகளில் மிக அதிகமாகக் காணலாம். இதற்கான காரணங்களாக ; மீவேகத் தகவல் தொழில்நுட்பவளர்ச்சியும் இணையப் பயன்பாடும்,
மரபுகளின் மீதான சலிப்பும் இடையறாத் தேடலுமே.
புதிய படைப்புகள் தோறும் விளிம்புநிலைப் பொருட்களைப்
பேசுதல், தன் அறிவுநிலைசார் சட்டங்களில் அனைத்தையும் நிர்வாணப்படுத்தல், தன் தேடலில்
தொடும் ஆழங்களை நிதர்சனப்படுத்தல், தன் சமகால இயக்கங்களின் சாட்சியாதல், வலிதான தன்முனைப்பு
வாதம் என பலவெளிகளைக் காணலாம்.
ஈழத்து இலக்கியவெளியில் இத்தகைய புதிய கட்டுடைப்பு
வெளிகளை புதிய தலைமுறைப் படைப்பாளிகளில் காணலாம்.
இதுவரை காலப்பகுதியிலிருந்த இலக்கிய வடிவங்களைத் "திரவப்படுத்தல்" எனும்
நவ நுட்பத்தினூடாக "கலாவல்லி முதலான கதைகள்", "விட்டில்" எனும்
இரு படைப்புகளை வெளிக்கொணர்ந்த இராகவன், "கபாலபதி", "வெள்ளைத்தோல் வீரர்கள்"
போன்ற படைப்புகளை யாத்த திசேரா , உளவியல் சார் கருத்தாடல்களை வித்தியாசமான ஆய்வுதளங்களில்
தரிசனப்படுத்தும் உளநல மருத்துவர் எஸ்.சிவதாஸ், "ஆறா வடு" எனும் படைப்பின்
ஊடு காலத்தின் கதைசொல்லியாய் பரிணமித்த சயந்தன் “இயங்குவெளி” எனும் Blog ஊடாக மாற்று
இயங்கிலுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் சசீவன் போன்ற படைப்பாளிகளை அடையாளப்படுத்தமுடியும்.இந்த
வகையில் மனோவின் "பேர்மனம்", "நிதர்சனம் ஒரு மாயை" போன்றவற்றை
அடையாளப்படுத்தலாம்.
2.
புதிய உரையாடல்வெளிகளை அறிமுகப்படுத்தல்.
தமிழ்ப்
படைப்புலகிற்கு புதிய பேசுபொருட்களை அறிமுகப்படுத்தல் என்பது தனது அறிவின் தேடலுக்கூடாகவும் அதன் மொழியின் ஊடாகவும் தனது படைப்பை பேசுதல் ஆகும்.ஒரு புதிய உரையாடல் வெளிக்கான அநுபவத்திற்கு படைப்பின் தரிசகனின் பயணமும் படைப்பாளனின் பயணமும் சலிப்புறா வண்ணம் அமைவது படைப்பாளனின் படைப்பின் மொழியாளுகைக்கும் அவனது அறிவுவெளிக்குமான சமநிலை தவறாத இயக்கத்திலும் தரிசகனின் அறிவின் விரிவு எல்லைகளின் அளவிலும்
இருக்கும். புதிய உரையாடல் வெளிகளை தனது படைப்பில் திறக்கும் படைப்பாளனுக்கு தன் மொழியாளுகை மீதான கடிவாளமும் தன் புதிய பேசுபொருளுக்கான அறிவினோடு வாழும் பேரியக்கமும் மிக அவசியமானது. அதாவது எவன் ஒருவனது எழுத்தும் அவனது வாழ்வும் ஒன்றாக ஒன்றி ஓர்மமாகிறதோஅவன் படைப்பு ஒர் பேரியக்கமாகும். அவ்வாறு இல்லாதுவிடின் ஒன்றில் வரட்டு அறிவுசார் தட்டையான-ஒற்றைப் பரிமாண - இலக்கியமாகவோ அல்லது ஜனரஞ்சகச் சொற்குவியல்கள் நிறைந்த மலின இலக்கியமாகவோ திரிபடையக் கூடிய அபாயம் உள்ளது.
பேரியக்க
படைப்பிலக்கியங்களாக மு.தளையசிங்கத்தின் " கலைஞனின்
தாகம்", மு.பொன்னப்பலத்தின் "நோயிலிருத்தல்", ஜெயமோகனின் "காடு",
எஸ்.ராமகிருஷ்ணனின்
"நெடுங்குருதி" போன்றவற்றைக் கூறலாம்.
புதிய உரையாடல் வெளிகளை அறிமுகப்படுத்திய ஆக்கங்களாக மனோவின் "கூர்ப்படையும் மனிதன்", "காலம் கடத்தல்"போன்றன அமையலாம்.
3. விஞ்ஞான ஆய்வு முறைமையிலான மறுவாசிப்பு
எமது புராதன இலக்கியங்கள், பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகள், ஆன்மீகமும் சமயங்களும், கலைகள், தொழில்நுட்பங்கள் எல்லாம் ஒரு விஞ்ஞான ஆய்வு முறைமையிலான மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படவேண்டியது
மிக அவசியமானது.விஞ்ஞான ஆய்வு முறைமையிலான மறுவாசிப்பு என்பது வெறுமனே வரட்டு அறிவியல் கொண்டு சாயம் பூசுவதல்ல. ஒரு குறித்த விடயத்தானத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் படைப்பியல் ஆய்வாளன் பின்வரும் செயல்முறைகளின் ஊடாகப் பயணிக்கவேண்டியது அவசியமானது.
1)
தனது விருப்பு வெறுப்பு வெளிகளுக்கப்பால் நின்று அவ்விடயத்தானம் சார்ந்த இது வரையான தரவுகள், ஆதாரங்கள், கருதுகோள்களைச் சேகரித்தலும் அவற்றை ஆவணப்படுத்தலும்
2)
ஆவணப்படுத்திய தரவுகள், ஆதாரங்கள், கருதுகோள்களின் உண்மைத்தன்மையை அறிய அதன் மூலங்களைத் தேடிநாடலும் அவற்றை ஒரு விஞ்ஞான பகுப்பாய்வு முறைமைக்கு உட்படுத்தலும்
3)
பகுத்தாயப்பட்ட தகவல்களை ஆய்வாளன் சார் அறிவுவெளியில் ஒழுங்குபடுத்தலும் ஆய்வுக்குட்படுத்தலும்.
4)
தான் கண்டடைந்த உண்மையை- மறுவாசிப்பை- எந்த அக புற வெளிகளோடும் அழுத்தங்களோடும் எவ்வித சமரசம் செய்யாது, வெளியிடல்
விஞ்ஞான
ஆய்வு முறைமையிலான மறுவாசிப்புக்கு தயராகும்
படைப்பாளன் அவன் வெளியெங்கும் இடையறா துடிக்கும் இயங்கியல் சுழலில் தன் வாழ்வையும்
மறுவாசிப்புக்குத் தேர்ந்தெடுத்த விடயத்தானத்தையும் ஒருபுள்ளியில் பரிவுறச் செய்து
அப்புள்ளியிலிருந்து மறுவாசிப்பு விரிவடைய வேண்டும். ஆனால் ஈழத்து இலக்கியப் பரப்பில்
தன் வாழ்வையும் படைப்பையும் பரிவுறச் செய்த ஆளுமைகள் மிகக் குறைவு. அதிலும் அத்தகைய
ஆளுமைகளுக்கான உரிய அங்கீகாரங்கள் இன்றுவரை "ஈழத்து இலக்கியவாதிகள்" என அடையாளப்படுத்தப்படும்
குழுமத்தால் வழங்கப்படவில்லை.இலக்கியச் செல்நெறிகள் எங்கெல்லாம் தேக்கமுறுகிறதோ அங்கெல்லாம்
காலம் இந்த ஆளுமைகளைப் பிரசவிக்கின்றது.
ஈழத்து இலக்கிய வெளியில் மு.தளையசிஙகத்தின் இயக்கம் இத்தகு ஆளுமையே. தனது படைப்பின் ஊடான மெய்முதல்வாதம், சாதிய எதிர்ப்பு, திறனாய்வு எல்லாவற்றிற்கும் தனது வாழ்வியலை பிரயோக வெளியாக்கி தன்னோடு இருந்த சமூகத்தின் விடுதலைக்காக ஒர் ஒர்மம்மிகு போராளியாகி ஈற்றில் அதற்கே வித்தான ஆளுமை.
எல்லோரும்
பேச விரும்பியும் பேசப் பயந்த பொருளை தன் இனத்திற்காக எதனோடும் சமரசம் செய்யாது, விரிவான தரவுகளின் பகைப்புலத்துடனான ஆய்வின்வழி "முறிந்த பனை" இன் ஊடாகப் பேசிய ராஜனி திரணகம உம் இத்தகு ஆளுமையே.
புராதன விண்வெளிக் கோட்பாட்டின் (Ancient Astronaut Theory) ஊடாக அணைத்தையும் நிர்வாணப்படுத்திய எரிக் வொன் டெனிக்கன்(Erich Von
Daniken) தனது மறுவாசிப்புகாக அதன் மூலங்களையும் ஆதாரங்களையும் தேடி எகிப்து,பெரு என உலகமெங்கும் வெறி பிடித்தலைந்தான். கையில் செலவுக்குப் பணமில்லாதபோது தான் தொழில்புரியும் இடத்தில் கையாடால் செய்தான். அவனது " Chariots
of the Gods?" எனும் முதல் நூல் வெளிவரும் போது சுவிசர்லாந்தின் சிறைகளில் பணக்கையாடல் குற்றத்திற்காக 3- 1/2 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் அவன் சிறையிலிருந்து இரண்டாவது புத்தகத்தை எழுதுகிறான்"Gods from the outer space"
இத்தகைய
ஒர்மமான விஞ்ஞான ஆய்வு முறைமையிலான மறுவாசிப்புகள் ஊடான படைப்புகள் மனோவிடமிருந்து விரிவடையவேண்டும்.நிச்சயம் விரிவடையும். இப்பிரதியில் உள்ள ஏனைய ஆக்கங்கள் மறுவாசிப்புக்கான தரவுகள்,ஆதாரங்கள்,கருதுகோள்களைச் சேகரித்தலும் அவற்றை ஆவணப்படுத்தலும் என்ற வகையறாக்களைச் சாரும்
இனிவரும்
காலங்களில் ஈழத்து, புலம்பெயர் இலக்கியக்கச் செல்நெறிகள் ஆரோக்கியமாக இருக்கும். புதிய தலைமுறை படைபாளிகளின் சித்தாந்தத் தெளிவு, நேர்படப் பேசுந் துணிவு,விரிவுபட்ட வாசிப்புப்புலம், இணையவழி விவாதங்கள் போன்றவை இலக்கிய செல்நெறிகளை புதிய பரிணாமங்களுக்கு இட்டுச்செல்லும்.