Showing posts with label என்னூடான தெறிப்புகளும் முறிவுகளும். Show all posts
Showing posts with label என்னூடான தெறிப்புகளும் முறிவுகளும். Show all posts

Tuesday, June 2, 2020

மு.பொவின் கவிதைகள்



'மையத்திலிருந்து வெளிநோக்கியும்
வெளியிலிருந்து மையம்நோக்கியும்
விரியும் காலப்பெண்ணாள்
அலைக்கரம் நீட்டி 
அலைக்கழிக்கின்றாள்.
இன்மையின் இருப்பையும்
இருப்பின் இன்மையையும்
சூனியவெளியில் ஒருங்கிணைக்கும்
காலவித்தகியின் மெல்லதிர் சிரிப்பில்
நான் காலச்சிதிலங்களாய் சிதைந்துபோகின்றேன்.
காலகியின் காதலையும்
காலியின் ஊடலையும்
கொண்டலையும் காலவெளியாய் விரிகிறேன்.'


மு.பொ எனும் ஓர் ஓர்மம் மிகு ஆளுமைக்கு காலந்தவறியெனும் சாஹித்திய ரத்னா விருது வழங்கப்பட்டதுக்கு சார்ந்தோருக்கு நன்றிகள்.மு.பொ விற்கு வாழ்த்துக்கள். சத்தியத்தைப் பாடும் எந்தவொரு கலைஞனையும் எம் சமூகம் அவன் வாழும் காலத்தில் ஏற்றுக்கொள்வதில்லை என திடசங்கற்பம் பூண்டுள்ளது. இது பாரதி முதல் மு.தளையசிங்கம் ஈறாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

மு.பொ வின் கவிதையின் வடிவங்களையோ அல்லது அவைசார் ஒப்பீடுகளையோ நான் முன்வைக்கப்போவதில்லை. மு.பொ வின் கவிதையின் ஊடான எனது பயணத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.மு.பொ வின் கவிதைத் தளங்களை என்சார்வெளிகளில் நான்கு காலப்பரிணாமப் பகுதிகளாக பகுத்தாய விழைகிறேன்.

காலம் – 1 -  விடுதலையைத் தேடுதல்
காலம் – 2 -  விடுதலையைப் பாடுதல்
காலம் – 3 -  விட்டு விடுதலையாகிப் பாடுதல்
காலம் – 4 -  விடுதலையாகுதல்.

காலம் – 1- விடுதலையைத் தேடுதல்

இது எல்லாக் கலைஞருக்குமான பொதுவெளி. தான் சார் சமூகம், கலாச்சாரம், கோட்பாடுகள், சித்தாந்தங்கள்,சிந்தனைகள் மீதான காதல், கோபம்,திணிப்புகள், நிர்மூலங்கள் போன்றவற்றை ஒரு கலைஞன் படைப்புகளின் ஊடாகப் பேச எத்தனிக்கும் போது அவனது பிரசவம் நிகழ்கின்றது. தன் அறிவின் வழி தான் பெற்ற அடைவுகளை தனது படைப்புகளின் பிரயோகித்து பரிசோதனை செய்யும் போது அவன்சார் சமூகம், கலாச்சாரம், கோட்பாடுகள், சித்தாந்தங்கள்,சிந்தனைகள் மீதான கட்டுடைப்புகள் நிகழ்கின்றன. இத்தகு மாற்றங்கள் சரியா? தவறா? அல்லது இவற்றை விளங்கிக் கொள்ளத்தேவையான அறிவிற்கான போதாமையா? போன்ற குழப்பங்களிலிருந்து தனது தேடலைத்தொடங்குகின்றபோது விடுதலையைத் தேடுகிறோம் எனத் தெரியாது – அறியாமல் – விடுதலையை தேடியலைகிறான்.

இத்தகு திரிசங்கு நிலையில் அவனில் உள்ள தேடியலையும் விடுதலைக் குழப்பநிலையானது அவனது அக்காலத்திற்கான படைப்புகளில் பிரதிபலிக்கும். அவனது படைப்புகள் ஊடாகப் பயணிக்கும் ஒரு தீவிர வாசகன் கலைஞனின் படைப்புகளுக்கிடையிலான தொடர்பில்லாத சிதைவுகளின் வழி கலைஞனின் விடுதலைக்கான தேடலை அனுபவிக்கலாம்.

இக்காலத்திற்கான மு.பொ வின் கவிதைகளினுடாகப் பயணித்தால்
'காலி லீலை' எனும் கவிதையில் காலமில்வெளியே இயற்கையாய், சமூகமாய், தானாய், அதுவாய் விரிகிறது.

' காலி என்பவள் பூத்தள்  இயற்கையாய்!
காலி என்பவள் ஆர்த்தள் சமூகமாய்!
காலி என்பவள் நானாய் நிமிர்ந்தனள்!
காலியே அதுவாகத் திகழ்கிறாள்'
- ( பக்கம் 2 - காலி லீலை - காலி லீலை - கவிதைத் தொகுப்பு )

'பேரறியா நச்சுப் பிரண்டை விளைகின்ற
ஓர் தீவில் வந்தே ஒதுங்கிக் கிடக்கின்றேன்!
ஏதாலும் நாவாய் இனியும் வரும்சிலமன்?
தூரத்தே அந்தச் சுழிப்பின் ஒளியாட்டம்....? '  
    - ( பக்கம் 11 - மதிப்பீடு- காலி லீலை - கவிதைத் தொகுப்பு )

என முடியும் 'மதிப்பீடு' எனும் கவிதையில் தன் வாழ்நிலை அனுபவத்தின் ஊடான சுயதேடலாகவும் விரிகிறது.

மு.பொ இக்காலத்திற்கான படைப்புகளில் தனக்கான – தனது சமூகத்திற்கான விடுதலையை இயற்கை, சாதி ஒறுப்பிற்கான வேட்கை, குருதரிசனம், 'சிலந்தி வலையைச் செய்ததா? வலையில் சிலந்தி விழுந்ததா?' எனும் கயிற்றரவு வாதங்கள், மதங்கள் என்பவற்றின் ஊடாகத் தேடியலைந்தாலும் எல்லாக் கவிதையின் உள்ளும் சிறு ஏக்கமாய் காலமில்வெளியாய் காலி விரிகிறாள்.

இதைத் தொடரும் மு.பொ வின் கவிதைகள் கலைக்கான கோட்பாடுகள், மெய்யியல் வியாக்கியானங்கள், கலைப்போலிகள் மீதான கோபம், தனிமனிதப்போக்குகள், மார்க்சியப் பரிசோதனைகள் , பொருள் முதல்வாத கருத்துமுதல்வாத சிந்தனைகள், விஞ்ஞான கோட்பாடுகள், அகமனயாத்திரைகள் போன்ற எண்ணற்ற தளங்களின் மீதாக இயந்திரத்தனமாக முயங்கினாலும் இக்கால இறுதிப்படைப்புகளில் காலியே எஞ்சுகிறாள்.

 ' யன்னல் இடுக்கிடையே
  மின்னல் தெறிக்கிறது!.
  பருக விழிவாயின்
  கதவு திறபடுமுன்
  நழுவும் அணில் வாலா? ' 

எனத் தொடங்கி

' வானப் பெருநீரில் 
 வெட்டும் 
 நீர்க்கோடு! '
- ( பக்கம் 36 - மின்னல்- காலி லீலை - கவிதைத் தொகுப்பு )

எனும் 'மின்னல்' கவிதையில் மின்னலாய் புன்னகைக்கிறது காலம். மின்னி மறைகிறது காலி.

காலம் – 2- விடுதலையைப் பாடுதல் 

எல்லாக் கலைஞர்களும் இந்தக் கட்டத்தை அடைவதில்லை. முதற் கட்டத்தில் பயணித்த ஏதாவதொரு தளத்தில் தம்மையறியாமல் சிக்கிவிடுவார்கள். தங்களுடைய தற்காலிகத் தரிப்புகளை நிரந்தர தரிப்புகள் ஆக்கி விடுவார்கள்.இயந்திரத்தனமான கோட்பாடுகளின் அபத்தங்களையும் மரபுசார் கட்டுப்பெட்டித்தனங்களையும் விடுதலையென நிலைநிறுத்திய பின் அவர்களால் பிரசவிக்கப்படும் படைப்புகளும் அபத்தங்களே.

ஆனால் மு.பொ வின் படைப்புகள் தான் கண்டடைந்த சத்தியத்தை விடுதலையாக்கி அதில் அனைத்து அபத்தங்களையும் கட்டுப்பெட்டித்தனங்களையும் தீக்கிரையாக்கி விடுதலையை எல்லாத்தளங்களிலும் பாடுகிறது.விடுதலையைக் கண்டறிந்த கலைஞன் விடுதலையை அனைத்து தளைகளிலிருந்தான விடுதலையாகப் பரிணமிக்க தன் படைப்புகளை வீரியமாக்குகின்றான்.

மு.பொ அரச அடக்குமுறைக்குள்ளான இனத்தின் விடுதலைக்கும் சாதி அடக்குமுறைக்குள்ளான சமூகத்தின் விடுதலைக்கும் அபத்தங்களிலிருந்தான தனிமனித விடுதலைக்கும் ஆன கவிதைகளை இக் காலப்பகுதியில் படைக்கின்றார். அடக்குமுறைக்குள்ளான இனத்தின் மீதான அனைத்து வன்முறைகளையும் இவ்வினத்தின் கையாலாகதனத்தின் அடையாளமான மிதவாத அரசியல் அபத்தங்களையும் தன் படைப்புகளில் பதிவு செய்கிறார்.

'ஆக்காத்திகள்' எனும் கவிதையில்

'என்னத்தை விட்டுவிட்டீர்கள்?

முட்டை இடும் ஆசையை.

முட்டை இடும் ஆசையையா?
இல்லை நீ பொய் சொல்கிறாய்.
அதுக்குப் பிறகும் நீ முட்டையிட்டுதானே இருக்கிறாய்?
தனிநாடு, சுயாட்சி, தமிழீழம் இவையெல்லாம்
உன் முட்டைகள் தானே.

இப்படி முட்டை இடுவதாக கொக்கரித்தேனேயொழிய
உண்மையாய் நான் ஒன்று இடவில்லை
இட்டதெல்லாம் வெறும் கொக்கரிப்புகள்தான்.
வெறும் மொட்டைக் கொக்கரிப்புகள்.'   
       
- ( பக்கம் 140 - ஆக்காத்திகள்- காலி லீலை - கவிதைத் தொகுப்பு )

என நீண்டு

'விடுதலை இருக்கையில் மானிட அமர்வு
மானிட இருப்பே விடுதலை என்றினித் தெளிவு
விடுதலை விடுதலை எல்லைகள் இல்லை
காக்கப்படுவதும் காப்பதுமில்லை
காவல் எமக்கு விடுதலையாமே' 
- ( பக்கம் 156 - ஆக்காத்திகள்- காலி லீலை - கவிதைத் தொகுப்பு )
என முடிகிறது.

காலம் – 3 – விட்டு விடுதலையாகிப் பாடுதல் 

ஒரு கலைஞன் தன் தேடலின் ஊடாக தான் பெற்ற விடுதலையையும் துறந்து தான் பேசப்போகும் பொருளோடு – அதன் தன்மையோடு – இயைந்து அதனை தன் படைப்பின் ஊடாக விஸ்வரூபம் கொள்ளச்செய்கிறான்.

மு.பொ வின் இக்காலத்திற்குரிய கவிதைகள் விடுதலையைக் கடந்த  ஒரு மோனநிலையிலிருந்து பெருக்கெடுப்பவை. இக்கவிதைகளின் பிரசவத்திற்கான ஊடகமே மு.பொ. அதாவது இக்காலக் கவிதைகள் மு. பொ எனும் கலைஞனை செதுக்குகின்றன.

'நிகழ்வுகளில் காலம் உடல் தரிக்கும்
அந்நிகழ்வுகளில் காலம் நிறம் பிரிக்கும்
இன்பநிகழ்வில், இலவம் பஞ்சாய்
காலம் மேலெழுந்து வேகங்கொள்ளும்
துயரச்சுமையில் காலம் உடல் கனத்து
மண்ணில் விழுந்து புரண்டழும்
கால மின்கம்பிகளில் எரியுண்டு 
தொங்கும் வெளவால்களாய்
'அகாலம் விழுந்த' மனிதர்கள்'
- (பக்கம் 4 - கவிதையில் துடிக்கும் காலம்- சூத்திரர் வருகை - கவிதைத் தொகுப்பு)

எனும் கவிதையில் மு.பொ எனும் கலைஞன் புதிதாய் பிறக்கின்றான்.


காலம் – 4- விடுதலையாகுதல். 

கலைஞனும் அவனது படைப்பும் காலவெளியில் கரைந்து விடுதலையாகி இதனை அனுபவிக்கும் வாசகனையும் மோனநிலைக்கு உயிராக்கும். இந்நிலைக் கவிதைகள் மிக மிக அரிதாகவே பிரசவிக்கப்படும்.

'தனிமை மௌனத்தின் இன்னோர் பெயராமோ?
இனிமை தனிமையின் வெளியொலிக்கா இன்னோர் மொழியாமோ?
வீணை நரம்பொருக்கால் 'டங்' கென்று அதிர்ந்து பின்
நீடிக்குமே நுண்ணிசையின் ஞானமுனை, அதிலமர்ந்து
எனையிழந்து எனையிழந்து எவர்குள்ளும் புரட்சிக்கு
அறைகூவி உயிர்க்கேனோ!
தீந்தழலின் உடைபோர்த்தென் சிதை நீறாய்
போகையிலும்
தீ தீண்டா என் மௌனப் பேரிருப்பே இவ்வுலகின்
இருப்பாக மாறாதோ!
குறுகி விரியும் பேரண்டம் உள் அதிர்வின்
ஒற்றைக் குரலாம் 'ஓம்' ல் உள் நுழைந்து
எவர்க்குள்ளும் ஒலிக்கேனோ! ஒலிக்கேனோ!'
- (பக்கம் 63 -மௌன வெளி வரிகள் - கவிதையில் துடிக்கும் காலம் - கவிதைத் தொகுப்பு)


மு.பொ வின் கவிதையின் தளங்களின் இருப்பும் இயக்கநிலையும் அலாதியானவை.ஒரு கலைஞனின் மோனநிலையின் தரிசனங்கள்.இவ்வுரையை தருமு சிவராமின் கவிவரிகளோடு நிறைவுசெய்கிறேன்.

'சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது'


- ஞானம் கலை இலக்கியப் பண்ணை ஏற்பாட்டில் 'சாஹித்திய ரத்னா' மு.பொ விற்கான பாராட்டுவிழாவில் மு.பொ வின் கவிதைபற்றிய எனது உரை
- 06-10-2018 - கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபம்

Sunday, November 23, 2014

பொ.மனோகரனின் -அறிவியல் தொடும் ஆழங்கள் - என்ற எழுத்தியங்கியலுக்கான திறனாய்வுவெளி


“காலமில்வெளிகளில் மெல்லக் கரைகையில் கரையமும் கரைப்பானும் காலமாகி விடுகின்றன. காலத்துடியிடையில் இடையறா இயங்கும் கருங்காந்தச் சுழலை வியக்கிறேன்”

“அறிவியல் தொடும் ஆழங்கள் " என்சார்வெளிகளில் சில இடையறா இயங்கும் உரையாடல் வெளிகளை தன் முகிழ்வின் ஊடாக அறிமுகப்படுத்தியது. அதுசார் விளைவுகளின் ஊடாக இந்த "அறிவியல் தொடும் ஆழங்கள்" எனும் எழுத்தியங்கியலுக்கான திறனாய்வு வெளி அதன் ஆழங்களைத் தேடும் அறிவியல்வெளி நோக்கிய பயணத்திற்கான கால்கோளாக அமையும் என நான் நம்புகிறேன்.

1.      கட்டுடைப்பும் பிரவாகமும்

இங்கே கூறப்படும் "கட்டுடைப்பு"  எனும் கருத்தாக்கம் பின்னவீனத்துவ கோட்பாட்டாளர்களால் வலியுறுத்தப்பட்ட "மையங்களைத் தகர்த்தல்" என்பது பற்றியதல்ல.

கட்டுடைப்பு என்பது வடிவங்களை - மரபுகளை- மீறி படைப்புகள் பேசுவது என்பதல்ல படைப்பாளன் தான் அநுபவித்தறிந்த உண்மையின் தரிசனத்தை எந்தவொரு கோட்பாடு-வடிவம்-மரபையும் மீறி சுயமாகத் தன் படைப்பின் ஊடாகப் பேசுதல். மு.பொன்னம்பலத்தின், இராகவனின் படைப்பு சார்பான திறானாய்வில் எடுத்தாளப்படும் " வடிவங்களைக் கடந்த வடிவம்" என்ற கருத்தாக்கம் கட்டுடைப்பின் சுயம் பற்றியதே. அதாவது "வடிவங்களைக் கடந்த வடிவம்" என்பது "வடிவமில் வடிவமே" - ஒரு படைப்பே அதன் வடிவமாதல்.

இதுவரைகால நவீன தமிழ்ப் படைப்புலக இயக்கத்தில் படைப்புகள் எண்ணிக்கையில் உயர்ந்த அளவில் அவற்றின் சிந்தனை மட்டத்திலான வளர்ச்சி  மிகவும் வறட்சியானது. கோட்பாட்டுரீதியான புதிய வெளிகளுக்கான சிந்தனைகளை ,மு.தளையசிங்கம் என்ற சிந்தனையாளனைத்தவிர்த்துப் பார்த்தால் சூனியமாகவே இருக்கும்.ஆனால் தற்போது மரபுகளை மீறிய கட்டுடைப்பு தமிழ் இலக்கியப் பரப்பில் நுழையும் புதிய படைப்புலகப் போராளிகளால் அவர்களின் புதிய பார்வை,மையமில் சிந்தனை, உடைந்தியங்கும் நிலை-இல்-கோட்பாடுகள் என்பவற்றால் பிரவாகமெடுக்கிறது. இவற்றின் முளைகளை ஈழத்து,இந்திய,புலம்பெயர் இலக்கிய புதிய படைப்பாளிகளின் படைப்புகளில் மிக அதிகமாகக் காணலாம். இதற்கான காரணங்களாக ; மீவேகத்  தகவல் தொழில்நுட்பவளர்ச்சியும் இணையப் பயன்பாடும், மரபுகளின் மீதான சலிப்பும் இடையறாத் தேடலுமே.


புதிய படைப்புகள் தோறும் விளிம்புநிலைப் பொருட்களைப் பேசுதல், தன் அறிவுநிலைசார் சட்டங்களில் அனைத்தையும் நிர்வாணப்படுத்தல், தன் தேடலில் தொடும் ஆழங்களை நிதர்சனப்படுத்தல், தன் சமகால இயக்கங்களின் சாட்சியாதல், வலிதான தன்முனைப்பு வாதம் என பலவெளிகளைக் காணலாம்.

ஈழத்து இலக்கியவெளியில் இத்தகைய புதிய கட்டுடைப்பு வெளிகளை  புதிய தலைமுறைப் படைப்பாளிகளில் காணலாம். இதுவரை காலப்பகுதியிலிருந்த இலக்கிய வடிவங்களைத் "திரவப்படுத்தல்" எனும் நவ நுட்பத்தினூடாக "கலாவல்லி முதலான கதைகள்", "விட்டில்" எனும் இரு படைப்புகளை வெளிக்கொணர்ந்த இராகவன், "கபாலபதி", "வெள்ளைத்தோல் வீரர்கள்" போன்ற படைப்புகளை யாத்த திசேரா , உளவியல் சார் கருத்தாடல்களை வித்தியாசமான ஆய்வுதளங்களில் தரிசனப்படுத்தும் உளநல மருத்துவர் எஸ்.சிவதாஸ், "ஆறா வடு" எனும் படைப்பின் ஊடு காலத்தின் கதைசொல்லியாய் பரிணமித்த சயந்தன் “இயங்குவெளி” எனும் Blog ஊடாக மாற்று இயங்கிலுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் சசீவன் போன்ற படைப்பாளிகளை அடையாளப்படுத்தமுடியும்.இந்த வகையில் மனோவின் "பேர்மனம்", "நிதர்சனம் ஒரு மாயை" போன்றவற்றை அடையாளப்படுத்தலாம்.


2.      புதிய உரையாடல்வெளிகளை அறிமுகப்படுத்தல்.

தமிழ்ப் படைப்புலகிற்கு புதிய பேசுபொருட்களை அறிமுகப்படுத்தல் என்பது தனது அறிவின் தேடலுக்கூடாகவும் அதன் மொழியின் ஊடாகவும் தனது படைப்பை பேசுதல் ஆகும்.ஒரு புதிய உரையாடல் வெளிக்கான அநுபவத்திற்கு படைப்பின் தரிசகனின் பயணமும் படைப்பாளனின் பயணமும் சலிப்புறா வண்ணம் அமைவது படைப்பாளனின் படைப்பின் மொழியாளுகைக்கும் அவனது அறிவுவெளிக்குமான சமநிலை தவறாத இயக்கத்திலும் தரிசகனின் அறிவின் விரிவு எல்லைகளின் அளவிலும்  இருக்கும். புதிய உரையாடல் வெளிகளை தனது படைப்பில் திறக்கும் படைப்பாளனுக்கு தன் மொழியாளுகை மீதான கடிவாளமும் தன் புதிய பேசுபொருளுக்கான அறிவினோடு வாழும் பேரியக்கமும் மிக அவசியமானது. அதாவது எவன் ஒருவனது எழுத்தும் அவனது வாழ்வும் ஒன்றாக ஒன்றி ஓர்மமாகிறதோஅவன் படைப்பு ஒர் பேரியக்கமாகும். அவ்வாறு இல்லாதுவிடின் ஒன்றில் வரட்டு அறிவுசார் தட்டையான-ஒற்றைப் பரிமாண - இலக்கியமாகவோ அல்லது ஜனரஞ்சகச் சொற்குவியல்கள் நிறைந்த மலின இலக்கியமாகவோ திரிபடையக் கூடிய அபாயம் உள்ளது.

பேரியக்க படைப்பிலக்கியங்களாக மு.தளையசிங்கத்தின் " கலைஞனின் தாகம்", மு.பொன்னப்பலத்தின் "நோயிலிருத்தல்", ஜெயமோகனின் "காடு", எஸ்.ராமகிருஷ்ணனின் "நெடுங்குருதி" போன்றவற்றைக் கூறலாம்.

புதிய உரையாடல் வெளிகளை அறிமுகப்படுத்திய ஆக்கங்களாக மனோவின் "கூர்ப்படையும் மனிதன்", "காலம் கடத்தல்"போன்றன அமையலாம்.

3. விஞ்ஞான ஆய்வு முறைமையிலான மறுவாசிப்பு

எமது புராதன இலக்கியங்கள், பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகள், ஆன்மீகமும் சமயங்களும், கலைகள், தொழில்நுட்பங்கள் எல்லாம் ஒரு விஞ்ஞான ஆய்வு முறைமையிலான மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படவேண்டியது மிக அவசியமானது.விஞ்ஞான ஆய்வு முறைமையிலான மறுவாசிப்பு என்பது வெறுமனே வரட்டு அறிவியல் கொண்டு சாயம் பூசுவதல்ல. ஒரு குறித்த விடயத்தானத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் படைப்பியல் ஆய்வாளன் பின்வரும் செயல்முறைகளின் ஊடாகப் பயணிக்கவேண்டியது அவசியமானது.


1)       தனது விருப்பு வெறுப்பு வெளிகளுக்கப்பால் நின்று அவ்விடயத்தானம் சார்ந்த இது வரையான தரவுகள், ஆதாரங்கள், கருதுகோள்களைச் சேகரித்தலும் அவற்றை ஆவணப்படுத்தலும்
2)       ஆவணப்படுத்திய  தரவுகள், ஆதாரங்கள், கருதுகோள்களின் உண்மைத்தன்மையை அறிய அதன் மூலங்களைத் தேடிநாடலும் அவற்றை ஒரு விஞ்ஞான பகுப்பாய்வு முறைமைக்கு உட்படுத்தலும்
3)       பகுத்தாயப்பட்ட தகவல்களை ஆய்வாளன் சார் அறிவுவெளியில் ஒழுங்குபடுத்தலும் ஆய்வுக்குட்படுத்தலும்.
4)       தான் கண்டடைந்த உண்மையை- மறுவாசிப்பை- எந்த அக புற வெளிகளோடும் அழுத்தங்களோடும் எவ்வித சமரசம் செய்யாது, வெளியிடல்


விஞ்ஞான ஆய்வு முறைமையிலான மறுவாசிப்புக்கு தயராகும் படைப்பாளன் அவன் வெளியெங்கும் இடையறா துடிக்கும் இயங்கியல் சுழலில் தன் வாழ்வையும் மறுவாசிப்புக்குத் தேர்ந்தெடுத்த விடயத்தானத்தையும் ஒருபுள்ளியில் பரிவுறச் செய்து அப்புள்ளியிலிருந்து மறுவாசிப்பு விரிவடைய வேண்டும். ஆனால் ஈழத்து இலக்கியப் பரப்பில் தன் வாழ்வையும் படைப்பையும் பரிவுறச் செய்த ஆளுமைகள் மிகக் குறைவு. அதிலும் அத்தகைய ஆளுமைகளுக்கான உரிய அங்கீகாரங்கள் இன்றுவரை "ஈழத்து இலக்கியவாதிகள்" என அடையாளப்படுத்தப்படும் குழுமத்தால் வழங்கப்படவில்லை.இலக்கியச் செல்நெறிகள் எங்கெல்லாம் தேக்கமுறுகிறதோ அங்கெல்லாம் காலம் இந்த ஆளுமைகளைப் பிரசவிக்கின்றது.
ஈழத்து இலக்கிய வெளியில் மு.தளையசிஙகத்தின் இயக்கம் இத்தகு ஆளுமையே. தனது படைப்பின் ஊடான மெய்முதல்வாதம், சாதிய எதிர்ப்பு, திறனாய்வு எல்லாவற்றிற்கும் தனது வாழ்வியலை பிரயோக வெளியாக்கி தன்னோடு இருந்த சமூகத்தின் விடுதலைக்காக ஒர் ஒர்மம்மிகு போராளியாகி ஈற்றில் அதற்கே வித்தான ஆளுமை.
எல்லோரும் பேச விரும்பியும் பேசப் பயந்த பொருளை தன் இனத்திற்காக எதனோடும் சமரசம் செய்யாது, விரிவான தரவுகளின் பகைப்புலத்துடனான ஆய்வின்வழி "முறிந்த பனை" இன் ஊடாகப் பேசிய ராஜனி திரணகம உம் இத்தகு ஆளுமையே.

புராதன விண்வெளிக் கோட்பாட்டின் (Ancient Astronaut Theory) ஊடாக அணைத்தையும் நிர்வாணப்படுத்திய எரிக் வொன் டெனிக்கன்(Erich Von Daniken) தனது மறுவாசிப்புகாக அதன் மூலங்களையும் ஆதாரங்களையும் தேடி எகிப்து,பெரு என உலகமெங்கும் வெறி பிடித்தலைந்தான். கையில் செலவுக்குப் பணமில்லாதபோது தான் தொழில்புரியும் இடத்தில் கையாடால் செய்தான். அவனது " Chariots of the Gods?" எனும் முதல் நூல் வெளிவரும் போது சுவிசர்லாந்தின் சிறைகளில் பணக்கையாடல் குற்றத்திற்காக 3- 1/2 வருடச் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் அவன் சிறையிலிருந்து இரண்டாவது புத்தகத்தை எழுதுகிறான்"Gods from the outer space"

இத்தகைய ஒர்மமான விஞ்ஞான ஆய்வு முறைமையிலான மறுவாசிப்புகள் ஊடான படைப்புகள் மனோவிடமிருந்து விரிவடையவேண்டும்.நிச்சயம் விரிவடையும். இப்பிரதியில் உள்ள ஏனைய ஆக்கங்கள் மறுவாசிப்புக்கான தரவுகள்,ஆதாரங்கள்,கருதுகோள்களைச் சேகரித்தலும் அவற்றை ஆவணப்படுத்தலும் என்ற வகையறாக்களைச் சாரும்


இனிவரும் காலங்களில் ஈழத்து, புலம்பெயர் இலக்கியக்கச் செல்நெறிகள் ஆரோக்கியமாக இருக்கும். புதிய தலைமுறை படைபாளிகளின் சித்தாந்தத் தெளிவு, நேர்படப் பேசுந் துணிவு,விரிவுபட்ட வாசிப்புப்புலம், இணையவழி விவாதங்கள் போன்றவை இலக்கிய செல்நெறிகளை புதிய பரிணாமங்களுக்கு இட்டுச்செல்லும்.

Monday, March 28, 2011

சலனங்களும் சலக்கடுப்பும்

சலனங்களும் சலக்கடுப்பும் மெல்ல மெல்ல மனதைக் குடைந்து வலியின் விவரணமாய் விரிந்துகொண்டிருப்பதால் நித்திராசங்கமம் குழம்பிக்கொண்டிருக்க, அவன் படுக்கையில் தன்னை “ X ” ஆக்கியும் “ Y ” ஆக்கியும் வெவ்வேறு பிரதியீடுகளை நிகழ்த்தியும், அவன் சமன்பாட்டில் தீர்வுகள் வரவில்லை. முடிவற்று விரிந்து சென்றன, அவன் தூக்கமின்மை போல.

தூக்கத்தைத் தொலைக்க மனதிற்கும் உடலிற்கும் எத்தனை காரணங்கள். ஒரு காரணத்திலிருந்து விரியுமொரு காரணம். ஒரு காரணத்தின் உள்ளிருந்து வெளிச்செல்லும் பட்டாம்பூச்சியாகவொரு காரணம். ஒரு காரணத்தின் வெளியிலிருந்து அதனை விழுங்கி வெளிவருமொரு காரணம். இரண்டும் சேர்ந்தும், இரண்டும் அழிந்தும், இரண்டற்றும் எங்கும் காரண நிகழ்வாய் அவன் சிந்தனைவெளியும் காரணமற்று காரணத்தைப் பின்தொடர்ந்தது.

மனவெளியில் சலனப்படங்களாய் இறந்துபோன நிகழ்வுகளும் அவைபற்றிக் கிளர்ந்தெழும் கற்பனைக்கோலங்களும் நகர்ந்துகொண்டேயிருந்தன. சில மின்னற் பளிச்சிடலில் தனக்குத்தானே தீமூட்டி அக்கினியாய் விரிந்த அவன் நண்பனின் மனைவியும் சற்றுமுன் அவன் வாசித்து முடித்த ஜெயமோகனின் விஷ்ணுபுரத்து செங்கழல் கொற்றவையும் மின்னிமறைந்தன. 2011 – உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி தொடக்கவிழாவில் சைக்கிள் ரிகஷாவில் வந்து இறங்கிய ஒவ்வொரு நாட்டின் அணித்தலைவர்களும் “ Sun News” இல் தொடர்ந்து சுழல்செய்தியாக சுழலும் ஆர்.ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழலும் சுழன்று சென்றன. சலகடுப்புக்கு என் இனியாள் கரைத்துத் தந்த சீனித்தண்ணியின் உதட்டோர நமநமப்பும் “ வடமாரட்சி கடற்பரப்பில் யாழ் மீனவர்களால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டனர்” என்ற அன்றைய வீரகேசரி நாளிதழின் தலைப்புச்செய்தியும் பளிச்சிட்டுச்சென்றன. கங்குலில் காற்றுப்போன மோட்டார் சைக்கிளை ‘ பஞ்சர்’ சரிசெய்வதற்கு கடையொன்றில் விட்டு வந்ததும் நேற்று இரவு Internet இல் காமக் காணொளியைப் பார்த்து சுயமைத்துனம் செய்ததும் நெடுகிச்சென்றன.
அவன் பணம்  நண்பன் கடன் , நண்பன் பணம்  அவன் கடன் இருவழிமுறை நட்புகளை வசைபாடியதும் Loan shark, Usury என்று Wikipedia இல் அவன் கண்டடைந்த சொற்களும் சலனங்களாக மிதந்து சென்றன.

நிகழ்வுகள் முடிச்சிட்டும் முடிச்சவிழ்ந்தும் மிதந்து சென்றன.அவனும் – ஏதுமற்று – விரியும் நிகழ்வுகளின் நிகழ்வெளியை – திரைப்படமொன்றைப் பார்க்கும் – பார்வையாளனாகப் “பார்”த்துக் கொண்டிருந்தான். சில கணங்களில் அவன் தனக்குள் அழுதான்; சிரித்தான்; திகைத்தான்; விறுவிறுப்படைந்தான்; புல்லரிப்படைந்தான்; கோபப்பட்டான். ஆனால் அவன் அக்கணப்பொழுதுகளில் “ஏன்?”, “எதற்கு?”, “ இது ஏன் இப்படி?” என்ற கேள்விகளினூடான தேடல்கள் இன்றியிருந்தான். “அவன்” + ஓடு ஒன்றியிருந்தான். நிகழ்வுகளின் சிலந்திப்பின்னலோடு தானும் பின்னலாகியிருந்தான். வலையில் பின்னலாய் விரிகிறானா! இல்லை வலையில் சிலந்தியாய் திரிகிறானா! விரியும் திரியன். திரியும் விரியன்.

சுழல்வெளிமையத்திலிருந்து நிகழ்வாய் தோன்றுகிறது “அது”. “அது” இவன் வெளியாய் மெல்ல விரிகிறது. கல்,மண்,அம்மா,அப்பா,ஆட்டுக்கல்,குத்தூசி ………. என மாணிக்கவாசகரின் சிவபுராணமாய் – புல்லாகிப் பூடாகி புழுவாய் மரமாகி பல்மிருகமாகி பறவையாய் பாம்பாகி - விரிகிறது சூனியவெளி. சுழல்திசை சுழி மாறுகிறது. கல்லும் மண்ணும், அம்மாவும் அப்பாவும், ஆட்டுக்கல்லும் குத்தூசியும் வாசகமாணிக்கத்தின் புராண சிவமாய் சுழல மீண்டும் சுழல்வெளி மையமாகி மையம் மறைகிறது. சிருஷ்டித்திரிகை அதன் சுழல்திசைகளின் சுழிப்போக்கில் பானையும் மண்ணுமாய் மாறிமாறி நிகழ்வுகளாய் விரிந்து கொண்டிருந்தது. நிகழ்வுகள் தாண்டவமாய்; நாதமாய் மெல்ல மெல்ல விரிய விரிய சலனங்களும் சலக்கடுப்பும் தொலைந்துபோக அவனும் தொலைந்துகொண்டிருந்தான். மீண்டும் அதே பிரதியீடுகள் அவன் சமன்பாட்டில் பிறிதொரு தீர்வு. மீண்டும் அதன் தீர்வே அடுத்த பிரதியீடு. பின் தீர்வு மீண்டும் பிரதியீடு. தீர்வு.பிரதியீடு.தீர்வு.பிரதியீடு……………..

Wednesday, December 24, 2008

பெண் உரிமை பற்றிய புதினம்

“பெண் உரிமை, பெண்ணியல்வாதம், சமவுரிமை”

• சுலோகங்கள். வெறும் சுலோகங்கள்.

o சுலோகங்களா?

o இவை வெறும் சுலோகங்களா?

• நம்ப முடியவில்லையா?

o சமவுரிமை மண்ணாங்கட்டி. ஆணும் பெண்ணும் உடலியல் நிலையில் சமனாக முடியுமா? ஆண் மேல் சட்டையில்லாமல் திரிவான்.பெண் திரிவாளா?

• சமவுரிமை உடலும் உடல் சார்ந்த தளங்களில் நிகழ்வதில்லை. அது மனமும் மனம் சார்ந்த தளங்களில் நிகழ்வது. சமவுரிமையில் உச்சம் ஆத்மாவும் அது சார்ந்த தளங்களில் பரிணமிப்பதே தான்

o அப்போ பெண் மேல்சட்டை இன்றித் திரிந்தால் தப்பில்லை என்கிறாயா?

• திரிந்தால் என்ன தப்பு.தப்பு என்பது உன் பார்வையில் உள்ளது. உறுப்புகளும் உறுப்புசார்ந்த எண்ணங்களையும் வலிதும் எளிதும் ஆக்கியவன் நீ.

o ஹி…. ஹி…. ஹி… நீயும் உன் பைத்தியகாரச் சித்தாந்தங்களும்

• உன்னால் ஒருபோதும் பெண்ணியத்தைப் புரிந்து கொள்ளமுடியாது.

o ஏன்?

• நீ பெண்களில் பெண்ணாதிக்கவாதியாகவும் ஆண்களில் ஆணாதிக்கவாதியாகவும் இருப்பவள்/ன்.

o என்ன! ஆண்கள் ஆணாதிக்கவாதிகள் ஆனால் பெண்கள் எல்லோரும் எப்படி பெண்ணாதிக்கவாதிகளாக இருக்கமுடியும்.

• ஆணாதிக்கத்திற்கு எதிராக எவ்வித போராட்டமுமின்றி தனது சுதந்திரத்தை மறுதலிக்கும் எல்லாப் பெண்ணியல் இருப்பும் பெண்ணாதிக்கயிருப்பே தான்.

o எப்படி?

• உன் மரபுகளும் சம்பிரதாயங்களும் அவளைச் சிறையில் ஆயுள்கைதியாக வைத்திருந்தும் அதிலிருந்து பறந்துசெல்ல விரும்பாதவள்.

o அப்போ எப்படி இருக்கவேண்டும்.

• விடுதலைபற்றிய கருத்தியலில் பெண் ப+ரணமடையவேண்டும். தன்னுடைய
தளைகளான (இருப்பிற்கு எதிரான)கணவன்,குடும்பம்,சமூகம்,மரபுகள்,…………… எல்லாவற்றிலிருந்தும் விடுபடல்வேண்டும்.

o விட்டு விட்டு ஓடச்சொல்கிறாயா?
• விடுபடல் என்றால் அவை பற்றிய தன் மரபுரீதியான கருத்தியல்களை நவீனப்படுத்தவேண்டும் என்கிறேன்.

o நவீனப்படுத்தல் என்றால்………….

• அவளும் அவள்சார் தளங்களினதும் கருத்தியல்கள் எல்லாம் சுதந்திரத்தை நோக்கி நெறிப்படுத்தப்படவேண்டும்.

o சுதந்திரத்தை நோக்கி நெறிப்படுத்தினால் பெண் - ஆண் சமத்துவம் வந்துவிடுமா?

• இல்லை. இக்கருத்தியற் சுதந்திரத்தை ஆண்நிலைவாதக் கருத்தியல்….

o அங்கிகரிக்கவேண்டும் என்கிறாயா?

• பார்த்தாயா! மீண்டும் தப்புப் பண்ணுகிறாய்.அங்கிகரித்தால் மீண்டும் பெண்ணியற் சமத்துவம் ஆண்நிலைவாதிகளால் பரிசளிக்கப்பட்டதுபோலவும், உருவாக்கப்பட்டது எனவும் நிறுவப்படும்.

o என்ன சொல்கிறாய்?

• சமத்துவம் இருவரினதும் உரிமை. பெண்ணியற் சமத்துவம் மறுக்கப்பட்டதே தவிர அதுவும் அனாதியானது.

o அதுசரி. பெண்ணியல்வாதக் கருத்தியற் சுதந்திரத்தை ஆண்நிலைவாதக் கருத்தியல் என்ன செய்யவேண்டும் என்கிறாய்.

• அதுபற்றி எந்தவொரு அசைவும் எதிராகவோஃஆதரவாகவோ இருக்கக்கூடாது.

o அப்படி என்றால் முடிவு?

• பெண்ணியற் சமத்துவம் + ஆண்நிலைச் சமத்துவம் = சமத்துவம்.

• இதனூடாக மிகப் பிரதான வர்க்கக் கருத்தியல் வேறுபாடு ஒன்று கருவழிக்கப்படும்.

• ஆணில் பெண்நிலைவாதியும் பெண்ணில் ஆண்நிலைவாதியும் பரிணமிப்பார்கள்.

o இது சாத்தியமாகுமா?

• மு.தளையசிங்கத்தின் சிந்தனைவழி சமூக அரசியல் பொருளாதார தளைகளைக் கடந்து கலைகளினூடாக விடுதலை பெற்ற சமூகத்தில் இது ஒரு சுயாதீன இயங்கியலாகும்.

• ∫(பெண்ணியம்) D(உரிமை) = ஆணியம்

• D(ஆணியம்)
-------------- = பெண்ணியம்
D(உரிமை)

• பரப்பளவுகளும் படித்திறன்களும் அந்தந்த புள்ளிகளுக்கிடையிலான ஒரே சார்பைப்பற்றிய இரு விளக்கங்கள் தான்.

• ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான மாறி உரிமை. அது மாற்றத்திற்கு உட்பட்டது.

• அதன் ஒவ்வொரு பெறுமானங்களுக்கும் ஒவ்வொரு சமூகக்கட்டமைப்பைத் தீர்மானிக்கின்றது.

• அந்தப் பெறுமானங்களைத் தீர்மானிப்பது தளைகளாக இல்லாமல் விடுதலையாக இருந்தால் அந்த சமூகம் பெண் - ஆண் சமத்துவ விடுதலை அடைகிறது.