சலனங்களும் சலக்கடுப்பும் மெல்ல மெல்ல மனதைக் குடைந்து வலியின் விவரணமாய் விரிந்துகொண்டிருப்பதால் நித்திராசங்கமம் குழம்பிக்கொண்டிருக்க, அவன் படுக்கையில் தன்னை “ X ” ஆக்கியும் “ Y ” ஆக்கியும் வெவ்வேறு பிரதியீடுகளை நிகழ்த்தியும், அவன் சமன்பாட்டில் தீர்வுகள் வரவில்லை. முடிவற்று விரிந்து சென்றன, அவன் தூக்கமின்மை போல.
தூக்கத்தைத் தொலைக்க மனதிற்கும் உடலிற்கும் எத்தனை காரணங்கள். ஒரு காரணத்திலிருந்து விரியுமொரு காரணம். ஒரு காரணத்தின் உள்ளிருந்து வெளிச்செல்லும் பட்டாம்பூச்சியாகவொரு காரணம். ஒரு காரணத்தின் வெளியிலிருந்து அதனை விழுங்கி வெளிவருமொரு காரணம். இரண்டும் சேர்ந்தும், இரண்டும் அழிந்தும், இரண்டற்றும் எங்கும் காரண நிகழ்வாய் அவன் சிந்தனைவெளியும் காரணமற்று காரணத்தைப் பின்தொடர்ந்தது.
மனவெளியில் சலனப்படங்களாய் இறந்துபோன நிகழ்வுகளும் அவைபற்றிக் கிளர்ந்தெழும் கற்பனைக்கோலங்களும் நகர்ந்துகொண்டேயிருந்தன. சில மின்னற் பளிச்சிடலில் தனக்குத்தானே தீமூட்டி அக்கினியாய் விரிந்த அவன் நண்பனின் மனைவியும் சற்றுமுன் அவன் வாசித்து முடித்த ஜெயமோகனின் விஷ்ணுபுரத்து செங்கழல் கொற்றவையும் மின்னிமறைந்தன. 2011 – உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி தொடக்கவிழாவில் சைக்கிள் ரிகஷாவில் வந்து இறங்கிய ஒவ்வொரு நாட்டின் அணித்தலைவர்களும் “ Sun News” இல் தொடர்ந்து சுழல்செய்தியாக சுழலும் ஆர்.ராசாவின் ஸ்பெக்ட்ரம் ஊழலும் சுழன்று சென்றன. சலகடுப்புக்கு என் இனியாள் கரைத்துத் தந்த சீனித்தண்ணியின் உதட்டோர நமநமப்பும் “ வடமாரட்சி கடற்பரப்பில் யாழ் மீனவர்களால் பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டனர்” என்ற அன்றைய வீரகேசரி நாளிதழின் தலைப்புச்செய்தியும் பளிச்சிட்டுச்சென்றன. கங்குலில் காற்றுப்போன மோட்டார் சைக்கிளை ‘ பஞ்சர்’ சரிசெய்வதற்கு கடையொன்றில் விட்டு வந்ததும் நேற்று இரவு Internet இல் காமக் காணொளியைப் பார்த்து சுயமைத்துனம் செய்ததும் நெடுகிச்சென்றன.
அவன் பணம் நண்பன் கடன் , நண்பன் பணம் அவன் கடன் இருவழிமுறை நட்புகளை வசைபாடியதும் Loan shark, Usury என்று Wikipedia இல் அவன் கண்டடைந்த சொற்களும் சலனங்களாக மிதந்து சென்றன.
நிகழ்வுகள் முடிச்சிட்டும் முடிச்சவிழ்ந்தும் மிதந்து சென்றன.அவனும் – ஏதுமற்று – விரியும் நிகழ்வுகளின் நிகழ்வெளியை – திரைப்படமொன்றைப் பார்க்கும் – பார்வையாளனாகப் “பார்”த்துக் கொண்டிருந்தான். சில கணங்களில் அவன் தனக்குள் அழுதான்; சிரித்தான்; திகைத்தான்; விறுவிறுப்படைந்தான்; புல்லரிப்படைந்தான்; கோபப்பட்டான். ஆனால் அவன் அக்கணப்பொழுதுகளில் “ஏன்?”, “எதற்கு?”, “ இது ஏன் இப்படி?” என்ற கேள்விகளினூடான தேடல்கள் இன்றியிருந்தான். “அவன்” + ஓடு ஒன்றியிருந்தான். நிகழ்வுகளின் சிலந்திப்பின்னலோடு தானும் பின்னலாகியிருந்தான். வலையில் பின்னலாய் விரிகிறானா! இல்லை வலையில் சிலந்தியாய் திரிகிறானா! விரியும் திரியன். திரியும் விரியன்.
சுழல்வெளிமையத்திலிருந்து நிகழ்வாய் தோன்றுகிறது “அது”. “அது” இவன் வெளியாய் மெல்ல விரிகிறது. கல்,மண்,அம்மா,அப்பா,ஆட்டுக்கல்,குத்தூசி ………. என மாணிக்கவாசகரின் சிவபுராணமாய் – புல்லாகிப் பூடாகி புழுவாய் மரமாகி பல்மிருகமாகி பறவையாய் பாம்பாகி - விரிகிறது சூனியவெளி. சுழல்திசை சுழி மாறுகிறது. கல்லும் மண்ணும், அம்மாவும் அப்பாவும், ஆட்டுக்கல்லும் குத்தூசியும் வாசகமாணிக்கத்தின் புராண சிவமாய் சுழல மீண்டும் சுழல்வெளி மையமாகி மையம் மறைகிறது. சிருஷ்டித்திரிகை அதன் சுழல்திசைகளின் சுழிப்போக்கில் பானையும் மண்ணுமாய் மாறிமாறி நிகழ்வுகளாய் விரிந்து கொண்டிருந்தது. நிகழ்வுகள் தாண்டவமாய்; நாதமாய் மெல்ல மெல்ல விரிய விரிய சலனங்களும் சலக்கடுப்பும் தொலைந்துபோக அவனும் தொலைந்துகொண்டிருந்தான். மீண்டும் அதே பிரதியீடுகள் அவன் சமன்பாட்டில் பிறிதொரு தீர்வு. மீண்டும் அதன் தீர்வே அடுத்த பிரதியீடு. பின் தீர்வு மீண்டும் பிரதியீடு. தீர்வு.பிரதியீடு.தீர்வு.பிரதியீடு……………..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment