Wednesday, August 19, 2015

16-08 - 2015 அன்று ஆடல்வல்லானின் பிரபஞ்ச நடனத்தின் ஆனந்தலயமாகிய எனது மாமா அமரர் கார்த்திகேசு மாணிக்கவாசகர் அவர்களுக்கு நாதமாய் வியாபிக்கும் அஞ்சலிகள்.

உன்னோடு நான் கதையாடிய காலவெளிகளை
மெல்ல அசைபோடுகையில்
நீ
என்னில் விதைத்துவிட்ட சிலநெறிகளை
எண்ணிக் காலத்தை வியக்கின்றேன்.

மானிடத்தவறுகளின் வெளிகளைக் கடந்த
சிந்தனைநிலைகளின் சிற்பி நீ.

உன்னைப் புரிந்து கொள்ள
நான் உன்னுடன் புரிந்த கதையாடல்கள்
போதுமானவையல்ல
ஏனெனில்நீ காலத்தை மீறி
சிந்திப்பவன்.

உன் சிந்தனைவெளிக்கும்
என் சிந்தனைவெளிக்கும்
இடைவெட்டு
சூனியத்தொடையாய்
என் வெளிகளில் முகிழ்ந்திருக்கையில்
உன் தூல இருப்பழிந்து
நீ காலவெளியாய் விரிகையில்
அகிலதொடையாய்
பரிணமிக்கின்றது.

காலத்தின் தொலைவுகளில்
தொலைந்துபோன காலமாய்
பிரபஞ்சநடனத்தின்
கால லயமாய்
நெடுநீள் பொழுதுகளின்
நிழலாய் விரியும் அகாலமாய்
உன் விரிதல்
நிகழ்கையில்
ஆடல் வல்லானின் பாத அசைவுகளின்
அதிர்வெளியாய் காலம் விரிகிறது.