பூரண படைப்பிலக்கியமும் அதன் தரிசனமும்
பூரண படைப்பிலக்கியம் கால, வெளி பரிமாணங்களைக் கடந்த காலமில்வெளிகளில், தனித்துவமான படைப்பிலக்கிய அதிர்வெண்களை அந்தமில் வீச்சுகளில் பிரசவித்தவண்ணமே இருக்கும். இப்படைப்பிலக்கியங்களோடு தொடர்புறும் வாசகன் தன் இயல்தகு கால, வெளி பரிமாணங்களிற்கான வெளிகளில் இப்படைப்பிலக்கியம் சார்பான, வாசகனின் படைப்பிலக்கிய அதிர்வெண்களை குறித்த வீச்செல்லைகளில் உருவாக்குகின்றான்.
குறித்தவொரு கால,வெளி பரிமாணங்களிற்கான படைப்பிலக்கியத்தின் அதிர்வெண்ணும் இப்படைப்பிலகியத்திற்கான வாசகனின் படைப்பிலக்கிய அதிர்வெண்ணும் ஒத்திசையும் போது வாசகனுக்கும் அப்படைப்பிலக்கியத்துக்கும் இடையிலான பரிவு நிகழ்கின்றது. இது அப்பரிமாணங்களிற்கான, அப்படைப்பிலக்கியத்திற்கான வாசகனின் உச்சமாகும் அல்லது படைப்பிலக்கியத்தின் தரிசனமாகும். வாசகன் தன்னோடு இயங்கும் சமூகவெளியின் ஒரு மூலகமாகையால், பரிவுறும் மூலகங்களை மிகுதியாகக் கொண்ட சமூகவெளியில் அதே பரிமாணங்களிற்கான உச்சத்தை இப்படைப்பிலக்கியம் அடைகிறது. அஃகுதில்லை எனில் அதன் தரிசனத்தை அல்லது உச்சத்தை அது அடையவில்லை.
முடிவாக, படைப்பிலக்கியத்தின் தரிசனமென்பது குறித்த கால, வெளி பரிமாணங்களுக்குப் பரிவுறும் உச்சங்களின் தொடையாகும் என்பதிலிருந்து பூரண படைப்பிலக்கியமானது குறித்த கால, வெளி பரிமாணங்களுக்கு ஊடாகத் தன்னை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றது.
உதாரணமாக திருக்குறளை 12ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் விளங்கிக் கொள்வதற்கும் 21ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் விளங்கிக்கொள்வதற்கும் வேறுபாடுகள் நுண் இயங்குதளங்களில் உண்டு. அதேபோல் திருக்குறளை 21ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் விளங்கிக்கொள்வதற்கும் இத்தாலியில் விளங்கிக்கொள்வதற்கும் வேறுபாடுகள் நுண் இயங்குதளங்களில் உண்டு.
திறனாய்வு
படைப்பாளி, தனது கால, வெளிப்பதிவுகளில் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் – அது அகம்சார்ந்தாகவும் இருக்கலாம். புறம்சார்ந்தாகவும் இருக்கலாம்- மூலம் படைப்பிலக்கியத்தின் ஊடாக ஒரு தரிசனத்தை நோக்கிச் செல்லமுற்படுகின்றான். ஆனால் சிலவேளைகளில் அவனது சிந்தனைவெளியின் போதாமையும் அல்லது விரிய முயற்சிக்காமையும், அவன் தன் அனுபவங்களின் ஊடான புரிதலை படைப்பிலக்கிய மொழியினூடு வெளிப்படுத்துவதில் உள்ள தடுமாற்றங்களாலும், கோட்பாடுகள், மரபுகளும் நியதிகளும் போன்ற மாயைகளாலும் தடைப்படும் அவன் தரிசனம் நோக்கிய பயணத்தை, அவனுடைய போதாமைகளையும் தடுமாற்றங்களையும் மாயைகளையும் இனங்கண்டு, அவனை அவன் தரிசனம் நோக்கி திசைப்படுத்துவதே உண்மையான திறனாய்வு.
இத்தகு திறனாய்வை இயற்றும் திறனாய்வாளன் முக்கியமான இரு இயல்புகளைக் கொண்டிருக்க வேண்டும். அவையாவன;
1. பரந்த வாசிப்பு
2. விரிந்த திறனாய்வு நிலைக்கான தளம்.
1. பரந்த வாசிப்பு
வாசிப்பானது
· தேர்ந்தெடுத்த வாசிப்புப்புலம் – எழுதுவது, அச்சில் வருவது, இலத்திரனியல் ஊடகங்களில் வருவது எல்லாம் படைப்பிலக்கியம் ஆவதில்லை. இவற்றிலிருந்து பூரண படைபிலக்கியங்களைத் தேர்தெடுக்கும் தகமை அவசியம். புதிய படைப்பிலக்கியங்கள் வரும்போது அவற்றை உள்வாங்கவும் படைப்பிலக்கிய உலகின் மாற்றங்களை/அதிர்வுகளை துல்லியமாக உணரவும் பூரண விரிநிலையில் தேர்வுகள் அமையவேண்டும். பூரண படைப்பிலக்கியங்களை இனங்காண்பதற்கு தொடர்வாசிப்பு அனுபவமும் உள்ளார்ந்த ஆத்மார்த்தத் தேடலும் மிக முக்கியம்.
· பன்முகப்பட்ட வாசிப்புப்புலம் – தாய்மொழி,பிறமொழி,மொழிபெயர்ப்பு எனும் பன்முகப்பட்ட மொழிரீதியான, கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் போன்ற பன்முகப்பட்ட இலக்கியவடிவங்கள்ரீதியான, செவ்வியல், மார்க்ஸிசம், பின்நவீனத்துவம், அமைப்பியல், இருப்பியல், நவீனத்துவம் போன்ற பன்முகப்பட்ட கோட்பாட்டுரீதியான, அரசியல், பொருளாதாரம், சமூகவியல், இறையியல், அறிவியல் போன்ற பன்முகப்பட்ட துறைரீதியான வாசிப்புகளும் இவற்றை இலகுவாக இனங்காணக்கூடிய தெளிந்த ஞானமும் அவசியம்.
· தொடர்ச்சியான வாசிப்புப்புலம் – கால இடைவெளியின்றிய ஒழுங்கமைவான தொடர்ச்சியான ஆழ்ந்த வாசிப்பானது, மொழி, வடிவம், கோட்பாடு போன்றவற்றில் ஏற்படும் பரிணாமரீதியான மாற்றங்களை உணர்ந்துகொள்ளவும் புதிய படைப்பாளிகளை இனங்காணவும், படைப்பாளிகள் அவர்களினது படைப்புலக தொடர் நடவடிக்கைகளை அகம் புறம் சார்ந்து அறியவும், தொடர்ந்து திறனாய்வுத்தளத்தில் திறம்பட இயங்கவும் அவசியமானது.
என்ற ஒழுங்கமைவுகளில் அமைய வேண்டும்.
2. விரிந்த திறனாய்வு நிலைக்கான தளம்.
விரிந்த திறனாய்வு நிலைக்கான தளம் பின்வரும் இயல்புகளைக் கொண்டிருக்கவேண்டும்.
· இலக்கியநேர்மை – இலக்கியதில் உள்ள உச்சங்களுடன் தன்நிலை மறந்து கரைந்து, தன்னுடைய ஆத்மார்த்தமான தளத்தில் தன்னுடைய கரைதலின் போதான அனுபவங்களை, தரிசனங்களை எவ்விதமான பக்கச்சார்புமின்றி வெளிப்படுத்தல்.
· துணிவு – அகம் புறம்சார் எதிர்நிலைகளைக் கண்டு அவற்றுக்கு அஞ்சாமல், படைப்பாளியின் போதாமைகளையும் தடுமாற்றங்களையும் மாயைகளையும் இனங்கண்டு, அவனை அவன் தரிசனம் நோக்கி திசைப்படுத்தல்.
· ஓப்பீடு – வரலாற்றின் செல்நெறியில், கால, வெளியோட்ட்த்தில் தன்னில் கரைந்த படைப்பிலக்கியங்கள், கோட்பாடுகள்,வடிவங்கள் போன்றவற்றை சரியான வேளையில் சரியான விகிதத்தில் தனது திறனாய்வின் போது உட்செலுத்தி படைப்பாளியின் படைப்பிலக்கியத்திற்கான மதிப்பீட்டை படைப்பிலக்கிய, கோட்பாட்டு,வடிவ அடிப்படையில் வழங்குதல்.
· ஒழுங்கமைவு – ஒரு படைப்பிலக்கியத்தின் மீதான திறானாய்வின்போது அதன் செல்நெறிகளைச் சீர்படுத்தி, அவன் தரிசனம் நோக்கிய பயணத்தை திசைப்படுத்துவதற்கான அவன் தரிப்பிடங்களை இனங்கண்டு அவற்றை ஒழுங்குபடுத்துதல் (செம்மையாக்கல்)
எனவே திறனாய்வாளன் பரந்த வாசிப்பு, விரிந்த திறனாய்வு நிலைக்கான தளம் எனும் இரு விடயங்களையும் கொண்டிருக்கவேண்டியவன் ஆகிறான். ஒரு படைப்பிலக்கியத்தை திறனாய்வாளன் திறனாய்வு செய்யும்போது தனது பரந்த வாசிப்பின் மூலம் படைப்பிலக்கியத்தின் தரிசனத்தையும் விரிந்த திறனாய்வு நிலைக்கான தளத்தின் மூலம் அப்படைப்பிலக்கியத்தின் திறனாய்வின் தரிசனத்தையும் அடைவதற்கான வழிகளை எளிமைப் படுத்துகின்றான்.
மு.பொ. – திறனாய்வின் புதிய திசைகள்
இந்நூலில் மு.பொ. வகைப் படுத்தியிருக்கும் நால் வகை விமர்சனங்களையும் நான் பின்வருமாறு மீள் பெயரிடுகிறேன்.
1. அறிமுக விமர்சனம் – ஆடுசார் விமர்சனம்
2. விமர்சனம் - பசுசார் விமர்சனம்
3. ஆய்வுநிலை விமர்சனம் – கூழைக்கடாசார் விமர்சனம் ( வலசை போகும் பறவைசார் விமர்சனம்)
4. எதிர்வினை விமர்சனம் – புலிசார் விமர்சனம்.
1. அறிமுக விமர்சனம் – ஆடுசார் விமர்சனம்
ஆட்டினுடைய இரைதேடல் பொறிமுறையை அவதானித்தால்
· தேடித் தேடி எல்லா இடங்களிலும் ஓடியோடி அதற்கான இரையைத் தேடுகின்றது. – எங்கெல்லாம் படைப்பிலக்கியங்கள் வருகின்றதோ அங்கெல்லாம் திறனாய்வின் திசைகள் நீள்கின்றன
· குறித்த சில நேர இடைகளில் அதற்குப் பிடித்த பலவற்றை உட்கொண்டிருக்கும். – பல எடுத்துக்காட்டுகள், சில விமர்சனங்கள்
· அதற்குப் பிடிக்காதவற்றிலும் கடித்து அதன் சுவையையும் சுவைத்துப் பார்க்கிறது. – கோட்பாட்டு, வடிவரீதியான உடன்பாடுகள் இல்லாவிட்டாலும் அவற்றிலும் சில தேடல்
· அதற்கு எட்டாத உயரத்திலிருக்கும் இரையையும் எட்டிக் கடித்துப் பார்க்கிறது. – புதிய கோட்பாடுகளை, வடிவங்களை விளங்கிக்கொள்ளலும் அவற்றின் செல்நெறிகளை கோடிகாட்டலும்
· ஆட்டின் இரைதேடும் இயக்கம் ஒரு ஒய்வில்லாத இயக்கம் – மு.பொ வின் இயக்கமும் ஓய்வில்லாத தொடர் இயக்கம்.
இரையின் சாராம்சமான ஆட்டினுடைய பால் சிறந்த மருந்தாகும் – மு.பொ வின் அறிமுக விமர்சனங்களினூடாக வாசகனுக்கான தேர்வு இலகுவாக்கப்படுதல் சிறந்த மருந்தெனலாம்.
2. விமர்சனம் - பசுசார் விமர்சனம்
பசுவினுடைய இரையுண்ணும் பொறிமுறையை அவதானித்தால்,
· முதலில் அது அதற்கான இரைக்கான/மேய்ச்சலுக்கான வெளியைத்தேர்ந்தெடுக்கிறது. – மு.பொ வும் இப்பிரிவில் குறித்தவொரு வடிவத்தை, குறித்தவொரு காலப்பகுதியிலான படைப்பிலக்கிய வெளியை, குறித்தவொரு கோட்பாட்டுப்பிரிவினரை என்ற வகையிலான தனக்கான விமர்சன வெளியைத் தேர்ந்தெடுக்கிறார்.
· நிதானமாக, தன்நிலைப்பட்டு மேய்ச்சலை நிகழ்த்துகின்றது. – பல்வேறு பிரிவுகளில், பல்வேறு நிலையான தளங்களில் தனது விமர்சனத்தை நகர்த்திச் செல்கிறார்.
· பின் ஓய்வாக ஓர் இடத்தில் படுத்தவண்ணம் ஒவ்வொன்றையும் அசைபோட ஆரம்பிக்கின்றது. – தனது தளங்களில் அவற்றிற்கான ஆத்மார்த்தத் தேடல்களையும் அவற்றின் கண்டடைவுகளையும் கூறுகிறார்.
பசுவின் இரையின் சாராம்சம் பால் ஒரு பூரண நிறையுணவாகும் – மு.பொ வின் விமர்சனங்களின் ஊடாக வாசகனுக்கான தேர்வுகள் பூரணப்படுத்தப்படுவதுடன், வாசகன் படைப்பிலக்கியத்தின் தரிசனம் நோக்கி நகர்த்தப்படுகின்றான்.
3. ஆய்வுநிலை விமர்சனம் – கூழைக்கடாசார் விமர்சனம் (வலசை போகும் பறவைசார் விமர்சனம்)
காலநிலை மாற்றங்களுக்கேற்ப வலசை போகும் பறவைகளின் நீண்ட பயணத்தின் போதான உத்திகளையும் அவற்றின் இயங்கியலையும் அவதானித்தால்
· புறப்படுவதற்கான காலமும் இடமும், சென்றடைவதற்கான காலமும் இடமும், அவற்றிற்கிடையேயான தூரம் என்பன துல்லியமாகத் தீர்மானிக்கப்படுகின்றன. – மு.பொ வும் ஆய்வுநிலை விமர்சனத்திற்கான படைபிலக்கியமாயினும் சரி. கோட்பாடாயினும் சரி, நவீன சிந்தனையாயினும் சரி மிகத்துல்லியமான தேர்வுகள்.
· மரபணுரீதியாக அவற்றில் சேமிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு அவற்றைப் பகுத்தாய்ந்து சமகால யதார்த்தங்களை உள்வாங்கி அவற்றின் பயணத்தின் போதான தகவல்களைத் தெளிவாக்குகின்றன. – மு.பொ தனது ஆத்மார்த்த தளங்களின் தேடலின் ஊடான கண்டடைவுகளினதும் பரந்த வாசிப்பின் ஊடான அனுபவப்பதிவுகளினதும் துல்லியமான பிரயோகங்கள்
· நீண்ட பறப்புத்தூரத்திற்கான பறப்புசக்தியைப் பெறுவதற்காக உயர் கலோரிசக்தி கொண்ட உணவுகளை உட்கொள்ளலும் காற்று இயக்கவியலின் (Aero dynamics)உத்திகளைப் பயன்படுத்தலும்.- இவ் விமர்சனங்களுக்கான மு.பொ வின் நீண்ட பயணத்திற்கான ஆத்மசக்தியும் உத்திகளும்.
· காலநிலை மாற்றங்களுக்கேற்ப மீண்டும் தங்கள் இருப்பிடங்களை நோக்கி மீளப் பறத்தல். – ஆத்மார்த்தளங்களில் ஆரம்பித்த பயணங்கள், பல ஆய்வு நிலைகளின் ஊடாக நகர்ந்து மீண்டும் ஆத்மார்த்த தளங்களில் அமர்தல்.
மு.பொ. தனது ஆய்வுநிலை விமர்சனத்தில் ஒரு படைபிலக்கியம். அல்லது நவீன சிந்தனையினது காலத்தையும் இயங்குவெளியையும் பற்றியதான ஆய்வுநிலைகளை தனக்கான அனுபவப்பதிவின் ஊடாகவும் சமகால யதார்த்தங்களின் ஊடாகவும் எதிர்கால எதிர்வுகூறலுக்கு இயைபாகவும் தனது ஆத்மார்த்தமான தளத்தில் நின்று வைத்திருக்கிறார்.
4. எதிர்வினை விமர்சனம் – புலிசார் விமர்சனம்.
இங்கு வேட்டையும் வேட்டையின் பின்னான விருந்தும் பிரதானமானவை.
· வேட்டைக்கான இலக்கு இனங்கானப்படுகிறது.- மு.பொ வினால் இனங்காணப்படும் இலக்கியப்போலிகளும் இலக்கியக் கபடங்களும் ஓரவஞ்சனைகளும் திரிபுகளும் கோட்பாட்டுப்பிழைகளும் இலக்குகள் ஆக்கப்படுகின்றன.
· வேட்டைக்கான இலக்கு மிகத் துல்லியமாக குறிவைக்கப்படுகின்றது.- குற்றங்கள் பகுத்தாய்வு செய்யப்பட்டு நிரூபணமாக்கப்படுகின்றன.
· இலக்கை நோக்கிய நகர்வு மிக நுட்பமாகப் பொறிமுறைப் படுத்தப்படுகிறது. – குற்றங்களுக்கான காரணங்கள் ஆதாரபூர்வமாக முன்வைக்கப்படுகின்றன.
· இலக்கின்மீதான ஒருமுகப்படுத்தப்பட்ட ஓர்மமான பாய்ச்சல்.-கட்டுக்கோப்பான துல்லியமான எதிர்வினை ஆற்றப்படுகிறது
· இலக்கு வேட்டையாடப்படுகிறது.- போலிகளின் முகமூடி கிழிக்கப்படுகின்றது
· இலக்கு விருந்தாகின்றது. – சத்தியம் நித்தியமாகின்றது.
எதிர்வினை விமர்சனம் ஆற்றுவதற்கு துணிவும் இலக்கியநேர்மையும் துல்லியமான தொடர்ச்சியான பரந்தவாசிப்பும் மிகவும் முக்கியமானது.
“திறனாய்வின் புதிய திசைகள்” இற்கான பிரயோகங்களாக, கவிதைசார் வெளிகளையே கருப்பொருளாகக் கொண்ட ஒரே நேர்கோட்டில் உள்ள ஆனால் வெவ்வேறு தளங்களில் உள்ள நான்கு புள்ளிகளாக, பின்வரும் நான்கு கட்டுரைகளையும் எனது கதையாடல்வெளிக்காக தேர்ந்தெடுக்கிறேன்.
1. அறிமுக விமர்சனம் – ஆடுசார் விமர்சனம்
“ ஆழியாளின் ‘உரத்துப் பேச’ – Page No -31”
· இந்நூலுக்கான திறனாய்வின் பின்புலமாக 1980 களில் வெளிவந்த பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுப்பான “ சொல்லாத சேதிகள்” என்ற நூலும் அதன் முன்னுரையில் கலாநிதி சித்திரலேகா மௌனகுரு “ மனித குலத்தின் அரைப்பகுதியினராகிய தம்மை மனிதம் அற்ற வெறும் யந்திரங்களாகவும், கருவிகளாகவும் கருதும் நிலை மாறவேண்டும் என்பது இன்றைய பெண்ணிலைவாதப் போராட்டங்களின் முக்கிய கோரிக்கையாகும். இக்கால கட்டத்தில் நாம் பெண்களுக்கான ஒரு கலை இலக்கியநெறியை உருவாக்குவது முக்கிய அம்சமாகும்” என்ற கூற்று முன்வைக்கப்படுகின்றது.
· ஆழியாளின் பெண்ணிலைவாத மையநிலைக்கருத்தை முழுமையாக “தடைதாண்டி” எனும் கவிதையின் எடுத்துக்காட்டின் ஊடாக மு.பொ தெளிவுபடுத்துகின்றார்.
நம் நேற்றைய சந்திப்பு
கடந்தபின்
நீ, உன்னை எந்நிமிடமும்
நான் தயாராகயிருக்கிறேன் எதிர்கொள்ள,
நீயும் நானும்
வரையறைகளைக் கடக்கவேண்டும் – நான்,
உன் விவேகத்தோடும்
நீ என் வீரியத்தோடும்
கடக்கவேண்டும்
எனினும்
என் கருவறையை
நிறைப்பது உன் குறியல்ல
என்ற புரிதலோடு
வா
ஒன்றாய் கடப்போம்.
நீ என் விவேகத்தோடும்
நான் உன் வீரியத்தோடும் -Page No -32
· பெண்ணிலைவாதத்திற்கு எதிரான அனைத்து ஆண்ணிலைவாதக் கருத்தியல் தளங்களைத் தகர்த்தவண்ணம் பெண்ணியவெளிகளில் ஆழியாளின் ‘உரத்துப் பேச’ விரிந்து செல்வதாக மு.பொ இத்திறனாய்வை நிறைவுசெய்கிறார்.
2. விமர்சனம் - பசுசார் விமர்சனம்
“ கடந்த நூற்றாண்டு ஈழத்துக் கவிதை– Page No -99”
· தெளிவான வரையறைகளையுடைய திறனாய்வுப்புலமாக 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துக் கவிதைப்புலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
· இக்காலவெளியில் இயங்கிய கவிஞர்களும் அவர்கள் இயங்கிய கருத்தியல்வெளி, எடுத்துச்சொல்முறை பற்றிய தெளிவான அட்டவணைப் படுத்தல்.
· சங்ககாலம், சங்கம் மருவியகாலம். பல்லவகாலங்களின் ஊடான கவிதையின் உருவமாற்றங்கள், எவ்வாறு அவை யமகம், திரிபு, சிலேடை என இயந்திரத்தனமான வடிவில் சிறைப்பட்டு பின் எவ்வாறு பாரதியில் மீள் எழுகிறது பற்றியதான, தமிழிலக்கிய கவிதைப் போக்கின் பின்புலத்தின் ஊடாக, கவிதையின் வடிவமாற்றங்கள் ஊடனான கதையாடல் வெளிகளைத் திறக்கிறார்.
· நாவலரின் சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான போக்கின் செல்வாக்கினால் அக்காலக் கவிஞர்களான பாவலர் துரையப்பாப்பிள்ளை, ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை, மகாலிங்கசிவம், முத்தமிழ்புலவர் மு.நல்லதம்பி, நவாலியூர் சோமசுந்தரப்புலவர் ஆகியோர் ஆட்கொள்ளப்பட்டபோதிலும், கவிஞர் சுப்பையா (“கனகிபுராணம்”) நவீனகவிதைக்கான களத்தை, அவரின் கவிதை ஊடான யதார்த்தத்தையும் பேச்சோசைப் பண்பையும் எடுத்துக்காட்டுவதன் மூலம் மு.பொ தன் திறனாய்வுவெளியை நவீன கவிதை நோக்கி நகர்த்துகிறார்.
“ புல்லையும் மேய்ந் தங்கு நின்ற திமிர்புரி இடபக்கன்று
கல்லையும் இழுத்துக்கொண்டு காட்டிடை ஓடும் “
“கனகிபுராணம்” – கவிஞர் சுப்பையா - Page No -102
· தனது நவீன ஈழத்துக்கவிதை பற்றிய திறனாய்வின் போக்குகளையும் அக்கவிதைகளின் உயிர்த்துவத்தையும் இலகுவாக அறிவதற்காக பின்வருமாறு நான்காக பிரிவுபடுத்துகிறார்.
1. எந்தவிதக் கருத்தியல்சார்புமற்ற யதார்த்தப்பாங்கான கவிதைகள்.
2. பழமைபேண் மார்க்சீயகருத்துக்கள் அல்லது சமயக் கருத்துகள் சார்ந்த கவிதைகள்.
3. இன்னவைதான் என்று எந்தக் கருத்தியலையும் சாராத எதிர்ப்பு இலக்கிய வகையைச் சார்ந்தவை அதாவது தமிழீழப் போராட்டத்திற்கு சார்பான எதிர்பிலக்கிய கவிதைகள் அடுத்து போராட்டத்தை தற்போது மேற்கொள்ளும் அமைப்புக்கு எதிரான எதிர்பிலக்கிய கவிதைகள்.
4. ஒத்தோடும் இன்றைய பலதரப்பட்ட சமூக அமைப்புகளுக்கும் எதிரான புதிய கருத்தியல் சார்ந்த எதிர்பிலக்கிய கவிதைகள்.
Page Nos -102 & 103
· ஈழத்து நவீன கவிதையின் ஆரம்பகர்த்தாவாகக் கொள்ளப்படும் மஹாகவி பேச்சோசைப்பண்புமிக்க கவிதைகளின் ஊடாக – எவ்வித தரிசனமுமற்ற – யதார்த்தவாதக் கவிஞராக மு.பொ தனது கருத்தாடல்களைத் தொடர்கிறார்.
· மஹாகவியின் காலத்திற்குப் பிந்தியவர்களாக நீலாவணன், முருகையன், சில்லையூர் செல்வராசன் ஆகியோரை மரபுவழிச்செய்யுளிலேயெ தமது கவிதைகளை வடித்தார்கள் எனவும், இவர்களில் மு.பொ முறையே ஆத்மார்த்தப்பண்பு, விஞ்ஞானப்பார்வை, அங்கதம் என்பன மையம் கொள்வதாகச் சொல்கிறார்.
· அதன் பின் எடுத்துச் சொல்முறையில் மாற்றங்களை ஏற்படுத்திய கவிஞர்களாக 60 களிலும் 70 களிலும் கவிதை எழுதத் தொடங்கியவர்களைக் குறிப்பிடுகிறார். இவர்களில் எம்.ஏ.நுஃமான், சண்முகம் சிவலிங்கம், சிவசேகரம் மரபுவழி மார்க்சீயக் கருத்தியலை ஏற்று மரபுவழிச் செய்யுளில் ஆரம்பத்தில் எழுதினாலும் பின் எம்.ஏ.நுஃமான், தவிர்ந்த ஏனைய இருவரும் வசனக்கவிதைகளை எழுத்தொடங்கினார்கள் என்பது பற்றியும் மு.பொ வின் “அது” கவிதைத்தொகுதியில் உள்ள புதுக்கவிதைகள் பற்றியும் தா.இராமலிங்கத்தின் “ புதுமெய்கவிதைகள்”, “ காணிக்கைகள்” எனும் இரு தொகுப்புகளில் உள்ள தமிழகப் புதுக்கவிதைப் போக்கிலிருந்து தம்மைப் பெரிதும் வேறுபடுத்திய சாதனைப்போக்கைப் பற்றியும் கூறுகிறார்.
· எண்பதுகளின் ஆரம்பத்தோடு ஈழத்துக் கவிதை உலகின் பொதுப்பண்பாக புதுக்கவிதையாகிறது என்கிறார்.
· எண்பதுகளில்
1. தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு சார்பான எதிர்பிலக்கிய கவிதைகள்
o சண்முகம் சிவலிங்கம் – “வெளியார் வருகை” , “ மரணத்துள் வாழ்வோம்” போன்ற கவிதைகள்.- மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடைப்பட்ட யாப்பமைதிக் கவிதைகள்
o அ.யேசுராசா – “ புதிய சப்பாத்தின் கீழ்” என்ற கவிதை
o சு.வில்வரத்தினம் – “அகங்களும் முகங்களும்”, “காலத்துயர்” போன்ற தொகுதிகளில் உள்ள கவிதைகள் –மண்வாசனை, தொன்மம், ஆத்மார்த்தம் உடனான தனித்துவமான ஓசைப்பண்புக் கவிதைகள்.
o சிவசேகரம் - “ வடலி” என்ற கவிதையும் “ போரின் முகங்கள்” எனும் தொகுதியில் உள்ள கவிதைகளும்.- மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடைப்பட்ட யாப்பமைதிக் கவிதைகள்
o மு.பொ - “விடுதலையும் புதிய எல்லைகளும்”, “விலங்கை விட்டெழும் மனிதர்கள்” போன்ற தொகுதிகளில் உள்ள கவிதைகள். – கவித்துவ வசனக்கவிதைகள்
o வ.ஐ.ஜெயபாலன் – ஒத்திசைவான யாப்பமைதிக் கவிதைகள்.
2. தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான எதிர்பிலக்கிய கவிதைகள்
o சேரன் –ஒத்திசைவற்ற வசனப்பாங்கான கவிதைகள்.
o சோலைக்கிளி – அஃறிணை பொருட்களின் உருவகப் புனைவுடைய கவிதைகள்
· தொண்ணூறுகளில் உணர்வுகள் மட்டுமன்றி சிந்தனைக்கு முதலிடம் தரும் கவிதைகள் வெளிவரத்தொடங்கியதாக மு.பொ கூறுகிறார். இது வாசுதேவனின் “ வாழ்ந்து வருதல்” தொகுப்புடன் ஆரம்பிக்கின்றது.
இத்தொகுதியில் உள்ள “ ஒரு மாலையும் நானும்” கவிதையில்
“வானம் இருளடைந்து
காற்று பலமாய் வீசும் இந்தமாலையில்
நான் பெருக்கெடுக்கிறேன்…
துயரில் நெஞ்சு கனக்கிறது
காரணம் புரியாது
அடிவயிற்றில் கத்திகள் பாய்கிறது”
- Page No -111
· இதன் தொடர்ச்சியாக மு.பொ நட்சத்திரன் செவ்விந்தியன், ஓட்டமாவடி அறபாத், ஜபார், அஸ்வகோஸ், அகிலன், கருணாகரன், றஷ்மி, அமரதாஸ், முல்லைக்கமல், சித்தாந்தன், கவிஞர்களையும் பெண்ணியக் கருத்தை முன்வைத்த பெண்கவிஞர்கள் அ.சங்கரி, சி.சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மகுறா ஏ.மஜிட், ஒளவை, ஊர்வசி,மைத்திரேயி,ரேணுகா, ஆழியாள் போன்றவர்களைக் குறிப்பிடுகிறார்
3. ஆய்வுநிலை விமர்சனம் – கூழைக்கடாசார் விமர்சனம் (வலசை போகும் பறவைசார் விமர்சனம்)
“ கவிதை பற்றிய சிந்தனை– Page No -213”
· “ பிரபஞ்ச யதார்த்த நோக்கில் ஒருவன் காலூன்றி ஒரு படைப்பில் ஈடுபடும்போது அவன் எத்தனையோ மனித கலாசாரங்களை விஞ்ஞானத்தை, அகஞானத்தை, நமது ஞாயிற்றுத்தொகுதிக்கு அப்பாற்பட்ட ரகசியங்களை அவற்றை வெளிப்படுத்துவதற்குரிய சாத்தியப்பாடுகளையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியவனாகிறான். அவன் எழுதும் ‘கவிதை’ வசனக் கவிதையா? புதுக்கவிதையா? அல்லது அந்நிலையில் ‘கவிதை’ என்ற பெயர் அவன் வெளிப்பாட்டுமுறையை விளங்க வைக்கமுடியுமா? “ - Page No -220
என்ற தனது “யதார்த்தமும் ஆத்மார்த்தமும்” என்ற நூலிலிருந்தான மேற்கோளின் மூலம் தனது “ கவிதை பற்றிய சிந்தனை” இன் சாராம்சத்தை மு.பொ. மிகத்தெளிவுபடுத்துகிறார்.
· தமிழிலுள்ள நவீன இலக்கிய வடிவங்களான சிறுகதை, கட்டுரை, நாவல், விமர்சனம் என்பன நமது ஆங்கிலத்தொடர்பினால் வந்ததெனக் கூறும் மு.பொ “அவற்றிலிருந்து விடுபட்டு நமது மொழியோடு, நமது மொழியின் தனித்துவத்தோடு ஒன்றி வருவது கவிதை- Page No -220” என்கிறார்.
· எல்லா இலக்கிய வடிவங்கள் ஊடும் கவிதையின் இயங்கியல் வெளியை தனது ஆத்மார்த்தவிசாரங்களின் ஊடாகக் காணும் மு.பொ கவிதையை இலக்கியவடிவங்களின் ஆத்மார்த்த இயங்கியலின் அழகியல்வெளியாக்கி கவிதையின் உருவம் இன்மையாகப் போகும் அத்துவைதப் போக்கை கோடிகாட்டுகிறார்.
· கவிதையின் இயங்கியலால் “ ஒர உணர்வுகள்” கிளறப்படுவதன் ஊடாக நாடகத்திற்கு ஓர் புத்துயிர்ப்பை தருவதாக T.S.Eliot ஐ ஆதாரம் காட்டி விளக்கும் மு.பொ மேலைநாடுகளின் Novel in Poetry போன்ற வடிவங்களையும் எடுத்துக்காட்டுகிறார்.
· கவிதை என்பது எதிலும் விரியும் அழகியலாகவே மு.பொ காட்டுகிறார்.
4. எதிர்வினை விமர்சனம் – புலிசார் விமர்சனம்.
“ “அகமெரியும் சந்தத்தில்” அடியோடும் நிராகரிப்பு– Page No -367”
· ஜெயமோகன் ஈழத்துக்கவிஞர் சு.வில்வரத்தினம் பற்றி “ அகமெரியும் சந்தம்” என்ற தலைப்பில் “காலம் “ இதழ் 27 இல் எழுதிய விமர்சனத்தின் ஊடான தளங்களுக்கு சமாந்தரமாக ஈழத்துக்கவிதைப்போக்குகளை, கவிஞர்களை பிற்போக்குத்தனமாக்கி, தமிழ்நாட்டுக் கவிஞர்களின் நவீனகவித்துவபுலமையை மட்டுமே தமிழ்க் கவிதைப்புலத்தின் அடையாளமாக்கி ஈழக்கவிதைகளை நிராகரிக்கும் போக்கை மு.பொ இனங்காணுகிறார்.
· ஜெயமோகனின் ஒவ்வொரு எதிரசைவுகளையும் சிதிலமாக்கி கேள்விகுள்ளாக்குதுடன் ஈழத்துக்கவிஞர்களின் கவிதைகள் பற்றிய ஜெயமோகனின் வாசிப்புப்புலத்தையும் கேள்விக்குள்ளாக்குகின்றார்.
· வரலாற்று இயங்கியல்வாதத்தில் கவிதையில் ஏற்பட்ட செல்நெறிகளை உலகக் கவிதைப்புலத்தில், தமிழ்க் கவிதைப்புலத்தில், ஈழத்துக் கவிதைப்புலத்தில் தனக்கே உரித்தான பரந்த வாசிப்புப்புலத்தின் அனுபவப்பதிவின் ஊடாக மு.பொ முன் வைக்கின்றார்.
· ஈழத்துக்கவிதைகளை பற்றிய தெளிந்த விமர்சனத்தை மு.பொ தான் எடுத்துக்காட்டிய ஈழத்துக் கவிதைகளின் ஊடாகவே நிகழ்த்துகிறார்.
மு.பொ வின் “திறனாய்வின் புதிய திசைகள்” என்ற படைப்பில் எனது கண்டடைவுகள் சிலவற்றை முன்வைக்கின்றேன்.அவையாவன
1. “திறனாய்வின் புதிய திசைகள்” எனும் மு.பொவின் வெளியோடு விரியும்போது பகவத்கீதையில் கண்ணன் இயம்பியதுபோல் “ கவிதையிலிருந்து கவிதையே தோன்றுகிறது. கவிதையிலிருந்து கவிதையே தோன்றியபின் எஞ்சியிருப்பதும் கவிதையே”
2. கவிதை ஆத்மார்த்த தளத்தின் இயங்கியலாகவும் எல்லாவற்றையும் கடந்தியங்கும் பெருந்தேடலாகவும் விரிகிறது.
3. கவிதைகளுக்கான திறனாய்வை மு.பொ தான் தேர்ந்தெடுக்கும் கவிதைகளின் ஊடாகவே நிகழ்த்துகிறார். இதற்கான தளங்களை, அக்கவிதைகளுடனான அவரின் பூரண கரைதலின் அத்துவைத நிலையிலிருந்து பெறுகிறார்.
4. “திறனாய்வின் புதிய திசைகள்” உடன் பரிவுறும் வாசகனில் எண்ணிறைந்த அதிர்முளைகளை பிரசவிக்கக்கூடியது. அவனில் அவன் இயல்தகு வெளிக்கேற்ப விரிவுறும் பல புதிய திசைகளைப் பிரசவிக்கக்கூடிய ஒரு ஜீவநதியின் பிரவாகம்.
5. மு.பொ வின் தேடலுக்கான பெரும்பயணமும் அவர் பயணித்த தளங்களும் இதற்கான இயங்கியலும் ஆச்சரியமானவை.