Tuesday, June 2, 2020

மு.பொவின் கவிதைகள்



'மையத்திலிருந்து வெளிநோக்கியும்
வெளியிலிருந்து மையம்நோக்கியும்
விரியும் காலப்பெண்ணாள்
அலைக்கரம் நீட்டி 
அலைக்கழிக்கின்றாள்.
இன்மையின் இருப்பையும்
இருப்பின் இன்மையையும்
சூனியவெளியில் ஒருங்கிணைக்கும்
காலவித்தகியின் மெல்லதிர் சிரிப்பில்
நான் காலச்சிதிலங்களாய் சிதைந்துபோகின்றேன்.
காலகியின் காதலையும்
காலியின் ஊடலையும்
கொண்டலையும் காலவெளியாய் விரிகிறேன்.'


மு.பொ எனும் ஓர் ஓர்மம் மிகு ஆளுமைக்கு காலந்தவறியெனும் சாஹித்திய ரத்னா விருது வழங்கப்பட்டதுக்கு சார்ந்தோருக்கு நன்றிகள்.மு.பொ விற்கு வாழ்த்துக்கள். சத்தியத்தைப் பாடும் எந்தவொரு கலைஞனையும் எம் சமூகம் அவன் வாழும் காலத்தில் ஏற்றுக்கொள்வதில்லை என திடசங்கற்பம் பூண்டுள்ளது. இது பாரதி முதல் மு.தளையசிங்கம் ஈறாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

மு.பொ வின் கவிதையின் வடிவங்களையோ அல்லது அவைசார் ஒப்பீடுகளையோ நான் முன்வைக்கப்போவதில்லை. மு.பொ வின் கவிதையின் ஊடான எனது பயணத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.மு.பொ வின் கவிதைத் தளங்களை என்சார்வெளிகளில் நான்கு காலப்பரிணாமப் பகுதிகளாக பகுத்தாய விழைகிறேன்.

காலம் – 1 -  விடுதலையைத் தேடுதல்
காலம் – 2 -  விடுதலையைப் பாடுதல்
காலம் – 3 -  விட்டு விடுதலையாகிப் பாடுதல்
காலம் – 4 -  விடுதலையாகுதல்.

காலம் – 1- விடுதலையைத் தேடுதல்

இது எல்லாக் கலைஞருக்குமான பொதுவெளி. தான் சார் சமூகம், கலாச்சாரம், கோட்பாடுகள், சித்தாந்தங்கள்,சிந்தனைகள் மீதான காதல், கோபம்,திணிப்புகள், நிர்மூலங்கள் போன்றவற்றை ஒரு கலைஞன் படைப்புகளின் ஊடாகப் பேச எத்தனிக்கும் போது அவனது பிரசவம் நிகழ்கின்றது. தன் அறிவின் வழி தான் பெற்ற அடைவுகளை தனது படைப்புகளின் பிரயோகித்து பரிசோதனை செய்யும் போது அவன்சார் சமூகம், கலாச்சாரம், கோட்பாடுகள், சித்தாந்தங்கள்,சிந்தனைகள் மீதான கட்டுடைப்புகள் நிகழ்கின்றன. இத்தகு மாற்றங்கள் சரியா? தவறா? அல்லது இவற்றை விளங்கிக் கொள்ளத்தேவையான அறிவிற்கான போதாமையா? போன்ற குழப்பங்களிலிருந்து தனது தேடலைத்தொடங்குகின்றபோது விடுதலையைத் தேடுகிறோம் எனத் தெரியாது – அறியாமல் – விடுதலையை தேடியலைகிறான்.

இத்தகு திரிசங்கு நிலையில் அவனில் உள்ள தேடியலையும் விடுதலைக் குழப்பநிலையானது அவனது அக்காலத்திற்கான படைப்புகளில் பிரதிபலிக்கும். அவனது படைப்புகள் ஊடாகப் பயணிக்கும் ஒரு தீவிர வாசகன் கலைஞனின் படைப்புகளுக்கிடையிலான தொடர்பில்லாத சிதைவுகளின் வழி கலைஞனின் விடுதலைக்கான தேடலை அனுபவிக்கலாம்.

இக்காலத்திற்கான மு.பொ வின் கவிதைகளினுடாகப் பயணித்தால்
'காலி லீலை' எனும் கவிதையில் காலமில்வெளியே இயற்கையாய், சமூகமாய், தானாய், அதுவாய் விரிகிறது.

' காலி என்பவள் பூத்தள்  இயற்கையாய்!
காலி என்பவள் ஆர்த்தள் சமூகமாய்!
காலி என்பவள் நானாய் நிமிர்ந்தனள்!
காலியே அதுவாகத் திகழ்கிறாள்'
- ( பக்கம் 2 - காலி லீலை - காலி லீலை - கவிதைத் தொகுப்பு )

'பேரறியா நச்சுப் பிரண்டை விளைகின்ற
ஓர் தீவில் வந்தே ஒதுங்கிக் கிடக்கின்றேன்!
ஏதாலும் நாவாய் இனியும் வரும்சிலமன்?
தூரத்தே அந்தச் சுழிப்பின் ஒளியாட்டம்....? '  
    - ( பக்கம் 11 - மதிப்பீடு- காலி லீலை - கவிதைத் தொகுப்பு )

என முடியும் 'மதிப்பீடு' எனும் கவிதையில் தன் வாழ்நிலை அனுபவத்தின் ஊடான சுயதேடலாகவும் விரிகிறது.

மு.பொ இக்காலத்திற்கான படைப்புகளில் தனக்கான – தனது சமூகத்திற்கான விடுதலையை இயற்கை, சாதி ஒறுப்பிற்கான வேட்கை, குருதரிசனம், 'சிலந்தி வலையைச் செய்ததா? வலையில் சிலந்தி விழுந்ததா?' எனும் கயிற்றரவு வாதங்கள், மதங்கள் என்பவற்றின் ஊடாகத் தேடியலைந்தாலும் எல்லாக் கவிதையின் உள்ளும் சிறு ஏக்கமாய் காலமில்வெளியாய் காலி விரிகிறாள்.

இதைத் தொடரும் மு.பொ வின் கவிதைகள் கலைக்கான கோட்பாடுகள், மெய்யியல் வியாக்கியானங்கள், கலைப்போலிகள் மீதான கோபம், தனிமனிதப்போக்குகள், மார்க்சியப் பரிசோதனைகள் , பொருள் முதல்வாத கருத்துமுதல்வாத சிந்தனைகள், விஞ்ஞான கோட்பாடுகள், அகமனயாத்திரைகள் போன்ற எண்ணற்ற தளங்களின் மீதாக இயந்திரத்தனமாக முயங்கினாலும் இக்கால இறுதிப்படைப்புகளில் காலியே எஞ்சுகிறாள்.

 ' யன்னல் இடுக்கிடையே
  மின்னல் தெறிக்கிறது!.
  பருக விழிவாயின்
  கதவு திறபடுமுன்
  நழுவும் அணில் வாலா? ' 

எனத் தொடங்கி

' வானப் பெருநீரில் 
 வெட்டும் 
 நீர்க்கோடு! '
- ( பக்கம் 36 - மின்னல்- காலி லீலை - கவிதைத் தொகுப்பு )

எனும் 'மின்னல்' கவிதையில் மின்னலாய் புன்னகைக்கிறது காலம். மின்னி மறைகிறது காலி.

காலம் – 2- விடுதலையைப் பாடுதல் 

எல்லாக் கலைஞர்களும் இந்தக் கட்டத்தை அடைவதில்லை. முதற் கட்டத்தில் பயணித்த ஏதாவதொரு தளத்தில் தம்மையறியாமல் சிக்கிவிடுவார்கள். தங்களுடைய தற்காலிகத் தரிப்புகளை நிரந்தர தரிப்புகள் ஆக்கி விடுவார்கள்.இயந்திரத்தனமான கோட்பாடுகளின் அபத்தங்களையும் மரபுசார் கட்டுப்பெட்டித்தனங்களையும் விடுதலையென நிலைநிறுத்திய பின் அவர்களால் பிரசவிக்கப்படும் படைப்புகளும் அபத்தங்களே.

ஆனால் மு.பொ வின் படைப்புகள் தான் கண்டடைந்த சத்தியத்தை விடுதலையாக்கி அதில் அனைத்து அபத்தங்களையும் கட்டுப்பெட்டித்தனங்களையும் தீக்கிரையாக்கி விடுதலையை எல்லாத்தளங்களிலும் பாடுகிறது.விடுதலையைக் கண்டறிந்த கலைஞன் விடுதலையை அனைத்து தளைகளிலிருந்தான விடுதலையாகப் பரிணமிக்க தன் படைப்புகளை வீரியமாக்குகின்றான்.

மு.பொ அரச அடக்குமுறைக்குள்ளான இனத்தின் விடுதலைக்கும் சாதி அடக்குமுறைக்குள்ளான சமூகத்தின் விடுதலைக்கும் அபத்தங்களிலிருந்தான தனிமனித விடுதலைக்கும் ஆன கவிதைகளை இக் காலப்பகுதியில் படைக்கின்றார். அடக்குமுறைக்குள்ளான இனத்தின் மீதான அனைத்து வன்முறைகளையும் இவ்வினத்தின் கையாலாகதனத்தின் அடையாளமான மிதவாத அரசியல் அபத்தங்களையும் தன் படைப்புகளில் பதிவு செய்கிறார்.

'ஆக்காத்திகள்' எனும் கவிதையில்

'என்னத்தை விட்டுவிட்டீர்கள்?

முட்டை இடும் ஆசையை.

முட்டை இடும் ஆசையையா?
இல்லை நீ பொய் சொல்கிறாய்.
அதுக்குப் பிறகும் நீ முட்டையிட்டுதானே இருக்கிறாய்?
தனிநாடு, சுயாட்சி, தமிழீழம் இவையெல்லாம்
உன் முட்டைகள் தானே.

இப்படி முட்டை இடுவதாக கொக்கரித்தேனேயொழிய
உண்மையாய் நான் ஒன்று இடவில்லை
இட்டதெல்லாம் வெறும் கொக்கரிப்புகள்தான்.
வெறும் மொட்டைக் கொக்கரிப்புகள்.'   
       
- ( பக்கம் 140 - ஆக்காத்திகள்- காலி லீலை - கவிதைத் தொகுப்பு )

என நீண்டு

'விடுதலை இருக்கையில் மானிட அமர்வு
மானிட இருப்பே விடுதலை என்றினித் தெளிவு
விடுதலை விடுதலை எல்லைகள் இல்லை
காக்கப்படுவதும் காப்பதுமில்லை
காவல் எமக்கு விடுதலையாமே' 
- ( பக்கம் 156 - ஆக்காத்திகள்- காலி லீலை - கவிதைத் தொகுப்பு )
என முடிகிறது.

காலம் – 3 – விட்டு விடுதலையாகிப் பாடுதல் 

ஒரு கலைஞன் தன் தேடலின் ஊடாக தான் பெற்ற விடுதலையையும் துறந்து தான் பேசப்போகும் பொருளோடு – அதன் தன்மையோடு – இயைந்து அதனை தன் படைப்பின் ஊடாக விஸ்வரூபம் கொள்ளச்செய்கிறான்.

மு.பொ வின் இக்காலத்திற்குரிய கவிதைகள் விடுதலையைக் கடந்த  ஒரு மோனநிலையிலிருந்து பெருக்கெடுப்பவை. இக்கவிதைகளின் பிரசவத்திற்கான ஊடகமே மு.பொ. அதாவது இக்காலக் கவிதைகள் மு. பொ எனும் கலைஞனை செதுக்குகின்றன.

'நிகழ்வுகளில் காலம் உடல் தரிக்கும்
அந்நிகழ்வுகளில் காலம் நிறம் பிரிக்கும்
இன்பநிகழ்வில், இலவம் பஞ்சாய்
காலம் மேலெழுந்து வேகங்கொள்ளும்
துயரச்சுமையில் காலம் உடல் கனத்து
மண்ணில் விழுந்து புரண்டழும்
கால மின்கம்பிகளில் எரியுண்டு 
தொங்கும் வெளவால்களாய்
'அகாலம் விழுந்த' மனிதர்கள்'
- (பக்கம் 4 - கவிதையில் துடிக்கும் காலம்- சூத்திரர் வருகை - கவிதைத் தொகுப்பு)

எனும் கவிதையில் மு.பொ எனும் கலைஞன் புதிதாய் பிறக்கின்றான்.


காலம் – 4- விடுதலையாகுதல். 

கலைஞனும் அவனது படைப்பும் காலவெளியில் கரைந்து விடுதலையாகி இதனை அனுபவிக்கும் வாசகனையும் மோனநிலைக்கு உயிராக்கும். இந்நிலைக் கவிதைகள் மிக மிக அரிதாகவே பிரசவிக்கப்படும்.

'தனிமை மௌனத்தின் இன்னோர் பெயராமோ?
இனிமை தனிமையின் வெளியொலிக்கா இன்னோர் மொழியாமோ?
வீணை நரம்பொருக்கால் 'டங்' கென்று அதிர்ந்து பின்
நீடிக்குமே நுண்ணிசையின் ஞானமுனை, அதிலமர்ந்து
எனையிழந்து எனையிழந்து எவர்குள்ளும் புரட்சிக்கு
அறைகூவி உயிர்க்கேனோ!
தீந்தழலின் உடைபோர்த்தென் சிதை நீறாய்
போகையிலும்
தீ தீண்டா என் மௌனப் பேரிருப்பே இவ்வுலகின்
இருப்பாக மாறாதோ!
குறுகி விரியும் பேரண்டம் உள் அதிர்வின்
ஒற்றைக் குரலாம் 'ஓம்' ல் உள் நுழைந்து
எவர்க்குள்ளும் ஒலிக்கேனோ! ஒலிக்கேனோ!'
- (பக்கம் 63 -மௌன வெளி வரிகள் - கவிதையில் துடிக்கும் காலம் - கவிதைத் தொகுப்பு)


மு.பொ வின் கவிதையின் தளங்களின் இருப்பும் இயக்கநிலையும் அலாதியானவை.ஒரு கலைஞனின் மோனநிலையின் தரிசனங்கள்.இவ்வுரையை தருமு சிவராமின் கவிவரிகளோடு நிறைவுசெய்கிறேன்.

'சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதிச்செல்கிறது'


- ஞானம் கலை இலக்கியப் பண்ணை ஏற்பாட்டில் 'சாஹித்திய ரத்னா' மு.பொ விற்கான பாராட்டுவிழாவில் மு.பொ வின் கவிதைபற்றிய எனது உரை
- 06-10-2018 - கொழும்புத் தமிழ்ச்சங்க மண்டபம்

அன்னபரிபூரணியாய் வியாபிக்கும் என் பேரன்னை.



8ந் திகதி  ஆனிமாதம் 2016 எம்மோடு ஆத்மார்த்தமாகக் கலந்த என் பேரன்னை சண்முகநாதன் சகுந்தலாதேவி இன் பதிவாகச் சில நிமிடங்கள்........................



"பெரிய எவர்சில்வர் பேணியில் தேத்தண்ணி"
"கோப்பையே தெரியாத அளவுக்கு சோறும் கறியும்"
"கண்மூடித் திறப்பதற்குள் தயாராகும் புட்டும் முட்டைப்பொரியலும்"
" அப்பன் இன்னும் கொஞ்சம் போடவா? எனும் தொடர் கேள்வி"
"என்ன மேனே வேணும்"
"வேணாம் என்றால் மிரட்டும் செல்லக்கோபம்"

என் பேரன்னை அன்னபூரணி அல்ல, காலங்களைக் கடந்த காலியாய் அண்டசராசரங்ககளை ஆரத்தழுவும் அன்னபரிபூரணியாய் வியாபிப்பவள்.
எம் சம்பிரதாயங்களுக்காக வீட்டுக்கு வருவோரை சாப்பிட்டுவிட்டுப் போங்கள் என கேட்பது என் இனத்தின் மரபு. இது மரபின் நிமித்தம் வருவது. இதில் எந்தவொரு அதிசயமும் இல்லை. உயிர்ப்பு இல்லை.

ஆனால்,

என் பேரன்னையின் " சாப்பிட்டுவிட்டுப் போங்கள்" என்பது வெறும் உதடுகள் பிரிவதால் வருவதில்லை. ஆத்மார்த்தமாக வருவது. இந்த மந்திரச்சொல்லுக்கு யாரும் மறுப்பேதும் சொல்ல இயலாது. ஏனெனில் இது சத்தியத்தில் உதிக்கும் நித்திய விருந்தோம்பல்.

பசி எம் முகத்தைவிட்டு நீங்கும்வரை பெரியம்மாவின் உணவுப் பரிமாறல் நிறைவு பெறாது. அவ மனதும் நிறைவுகொள்ளாது.

எத்தனையொமுறை பெரியம்மாவிடம் போகமுன் சாப்பிட்டுவிட்டுப் போயும் இரண்டாம் தரமும் சாப்பிட்டு இருக்கிறேன்.

இது எனக்கு மட்டுமான அனுபவம் மட்டுமல்ல. என் பேரன்னையிடம் போன அணைவருக்குமான அனுபவம்.

பேரன்னையின் அடுத்த பரிமாணம் - குற்றங்கண்டு நடுநிலை நின்று நேர்படப்பேசும் நக்கீரணி.

அம்மா,அப்பா, கணவன், பிள்ளைகள், உறவுகள் யாரேன்றாலும் குற்றம் குற்றமே என நீதி கேட்கும் எம் பேரன்னை எம் கண்ணகைபுரத்தில் பிறந்த எம் கண்ணகி.

இதயத்தின் மூளைக்கு தத்துவங்கள் புரிவதில்லை. அதற்கு அன்பெனும் பரிபாஷை மட்டும்தான் புரிவதால்என் இதயம் கனக்கிறது தாயே.

உன் வெளியென்பது இனி எனக்கு சூனிய வெளி தான்.
உன் நினைவுகள் மட்டும் என்னை ஆரத்தழுவும்.
உன் சூட்சும அன்புவெளி எப்போதும் காலங்கடந்தும் நித்தியமாயிருக்கும்.

"முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ பின் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே
யாமும் இட்ட தீ மூள்க மூள்கவே."

அப்பாச்சி



அப்பாச்சி......
ஒரு காலப்பிரவாகத்தின்
ஓயா இழையோடும்
நீள்மௌனத்தின் மென்னதிர்வு.

உன் கண்களின் ஊடாக நான் இந்த
உலகின் உன்னதமான வெளிகளைத்
தரிசித்திருக்கிறேன்.

உன் மொழியின் வழி வலிமிகு ரணம்
நிறை மனதினை ஆற்றுப்படுத்திருக்கிறேன். 

உன் வாழ்வியல் சுவடுகள் தோறும்
உயிர்களின் உன்னத நேசிப்பும்
நிறைவிருந்தோம்பின் பூரிப்பும்
அதீத அன்பின் ஆர்பரிப்பும்
ஆழவிரியும் காலமேருவாய் வியாபிக்கும்.

முந்நீர் புனலின்று தெறித்த நுரையின்
புரையுரு வாழ்வின் சிறுதுகள் பருதின்
காலப்பின்னங்களின் பின்னல்களாய்
பின்னிச்செல்லும் காலத்தச்சனின்
அற்புதக்கண்ணி. அப்பாச்சி......