Wednesday, December 24, 2008

பெண் உரிமை பற்றிய புதினம்

“பெண் உரிமை, பெண்ணியல்வாதம், சமவுரிமை”

• சுலோகங்கள். வெறும் சுலோகங்கள்.

o சுலோகங்களா?

o இவை வெறும் சுலோகங்களா?

• நம்ப முடியவில்லையா?

o சமவுரிமை மண்ணாங்கட்டி. ஆணும் பெண்ணும் உடலியல் நிலையில் சமனாக முடியுமா? ஆண் மேல் சட்டையில்லாமல் திரிவான்.பெண் திரிவாளா?

• சமவுரிமை உடலும் உடல் சார்ந்த தளங்களில் நிகழ்வதில்லை. அது மனமும் மனம் சார்ந்த தளங்களில் நிகழ்வது. சமவுரிமையில் உச்சம் ஆத்மாவும் அது சார்ந்த தளங்களில் பரிணமிப்பதே தான்

o அப்போ பெண் மேல்சட்டை இன்றித் திரிந்தால் தப்பில்லை என்கிறாயா?

• திரிந்தால் என்ன தப்பு.தப்பு என்பது உன் பார்வையில் உள்ளது. உறுப்புகளும் உறுப்புசார்ந்த எண்ணங்களையும் வலிதும் எளிதும் ஆக்கியவன் நீ.

o ஹி…. ஹி…. ஹி… நீயும் உன் பைத்தியகாரச் சித்தாந்தங்களும்

• உன்னால் ஒருபோதும் பெண்ணியத்தைப் புரிந்து கொள்ளமுடியாது.

o ஏன்?

• நீ பெண்களில் பெண்ணாதிக்கவாதியாகவும் ஆண்களில் ஆணாதிக்கவாதியாகவும் இருப்பவள்/ன்.

o என்ன! ஆண்கள் ஆணாதிக்கவாதிகள் ஆனால் பெண்கள் எல்லோரும் எப்படி பெண்ணாதிக்கவாதிகளாக இருக்கமுடியும்.

• ஆணாதிக்கத்திற்கு எதிராக எவ்வித போராட்டமுமின்றி தனது சுதந்திரத்தை மறுதலிக்கும் எல்லாப் பெண்ணியல் இருப்பும் பெண்ணாதிக்கயிருப்பே தான்.

o எப்படி?

• உன் மரபுகளும் சம்பிரதாயங்களும் அவளைச் சிறையில் ஆயுள்கைதியாக வைத்திருந்தும் அதிலிருந்து பறந்துசெல்ல விரும்பாதவள்.

o அப்போ எப்படி இருக்கவேண்டும்.

• விடுதலைபற்றிய கருத்தியலில் பெண் ப+ரணமடையவேண்டும். தன்னுடைய
தளைகளான (இருப்பிற்கு எதிரான)கணவன்,குடும்பம்,சமூகம்,மரபுகள்,…………… எல்லாவற்றிலிருந்தும் விடுபடல்வேண்டும்.

o விட்டு விட்டு ஓடச்சொல்கிறாயா?
• விடுபடல் என்றால் அவை பற்றிய தன் மரபுரீதியான கருத்தியல்களை நவீனப்படுத்தவேண்டும் என்கிறேன்.

o நவீனப்படுத்தல் என்றால்………….

• அவளும் அவள்சார் தளங்களினதும் கருத்தியல்கள் எல்லாம் சுதந்திரத்தை நோக்கி நெறிப்படுத்தப்படவேண்டும்.

o சுதந்திரத்தை நோக்கி நெறிப்படுத்தினால் பெண் - ஆண் சமத்துவம் வந்துவிடுமா?

• இல்லை. இக்கருத்தியற் சுதந்திரத்தை ஆண்நிலைவாதக் கருத்தியல்….

o அங்கிகரிக்கவேண்டும் என்கிறாயா?

• பார்த்தாயா! மீண்டும் தப்புப் பண்ணுகிறாய்.அங்கிகரித்தால் மீண்டும் பெண்ணியற் சமத்துவம் ஆண்நிலைவாதிகளால் பரிசளிக்கப்பட்டதுபோலவும், உருவாக்கப்பட்டது எனவும் நிறுவப்படும்.

o என்ன சொல்கிறாய்?

• சமத்துவம் இருவரினதும் உரிமை. பெண்ணியற் சமத்துவம் மறுக்கப்பட்டதே தவிர அதுவும் அனாதியானது.

o அதுசரி. பெண்ணியல்வாதக் கருத்தியற் சுதந்திரத்தை ஆண்நிலைவாதக் கருத்தியல் என்ன செய்யவேண்டும் என்கிறாய்.

• அதுபற்றி எந்தவொரு அசைவும் எதிராகவோஃஆதரவாகவோ இருக்கக்கூடாது.

o அப்படி என்றால் முடிவு?

• பெண்ணியற் சமத்துவம் + ஆண்நிலைச் சமத்துவம் = சமத்துவம்.

• இதனூடாக மிகப் பிரதான வர்க்கக் கருத்தியல் வேறுபாடு ஒன்று கருவழிக்கப்படும்.

• ஆணில் பெண்நிலைவாதியும் பெண்ணில் ஆண்நிலைவாதியும் பரிணமிப்பார்கள்.

o இது சாத்தியமாகுமா?

• மு.தளையசிங்கத்தின் சிந்தனைவழி சமூக அரசியல் பொருளாதார தளைகளைக் கடந்து கலைகளினூடாக விடுதலை பெற்ற சமூகத்தில் இது ஒரு சுயாதீன இயங்கியலாகும்.

• ∫(பெண்ணியம்) D(உரிமை) = ஆணியம்

• D(ஆணியம்)
-------------- = பெண்ணியம்
D(உரிமை)

• பரப்பளவுகளும் படித்திறன்களும் அந்தந்த புள்ளிகளுக்கிடையிலான ஒரே சார்பைப்பற்றிய இரு விளக்கங்கள் தான்.

• ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான மாறி உரிமை. அது மாற்றத்திற்கு உட்பட்டது.

• அதன் ஒவ்வொரு பெறுமானங்களுக்கும் ஒவ்வொரு சமூகக்கட்டமைப்பைத் தீர்மானிக்கின்றது.

• அந்தப் பெறுமானங்களைத் தீர்மானிப்பது தளைகளாக இல்லாமல் விடுதலையாக இருந்தால் அந்த சமூகம் பெண் - ஆண் சமத்துவ விடுதலை அடைகிறது.

மறப்பதும் மறக்கப்ப்டுவதும் மரணத்தைவிடக் கொடுமையானது.

மறப்பதும் மறக்கப்படுவதும்
மரணத்தைவிடக் கொடுமையானது.

ஏன்………… ஏன்……….. ஏன்…………….
முத்தமிட்டாய் என்னை,
என் இதயத்தில் ஏன் முற்றமிட்டு
என்னை முத்தமிட்டாய்.

முடிவுகளைப் பரிசளித்ததாய் சந்தோஷப்படுகிறாய்.
முடிவுகள்; ஆரம்பங்கள்;
வெற்றிகள்; தோல்விகள்;
இன்பங்கள்; துன்பங்கள்;
முரண்களுக்குகப்பாலிருந்துதான்
நான் உன்னை நேசித்தேன்.
என் நினைவுகளுக்கூடாக
உன்னை நான் சீராட்டியபோதும்
என் நினைவுகளையும் விஞ்சி
உன்னை நான் காதலித்தேன்.

மலராய் மலர்தல்………………..

அந்தக் காலங்கள்…………
என் அழகிய நிலாக்காலங்கள்.
என் வனவாசம் களைந்து – என்
அஞ்ஞாதவாசமும் அஸ்தமிக்கும்
ஓர் அற்புதக் காலத்துடியிடைப் பொழுது
பெண்ணே! என் காதற்பெண்ணே!

உன்னைக் கண்டதும்
நான் என்னை உணர்ந்தேன்.
உன்னைக் கண்டதும்
நான் வெறுக்கவும் காதலிக்கவும் கற்றுக்கொண்டேன்.
உன்னைக் கண்டதும்
என் ஆன்மாவை உணர்ந்துகொண்டேன்.

அதுவரை
மதங்கொண்டலையும் வெறியனாய்,
வெறிகொண்டலையும் ஞமலியாய்,
மதுதேடியலையும் புல்லனாய்,
பித்தேறித்திரிந்த காமுகனாய்
அலைந்த என் மனம்,வாக்கு,காயம் எனும்
திரிவேணிசங்கமம்,
உன்னை ஒரு புள்ளியாக்கி
உன்னில் குவிந்தன!
என் காதற்பெண்ணே!

குவிந்தமலர்கள் மீண்டும் மலர்ந்தபோது
நான் மறுபடியும் ஜனனித்தேன்.
அர்த்தமற்றுத்தெரிந்த இஞ்ஞாலத்தின்
ஒவ்வொரு அர்த்தங்களையும் கற்றுத்தந்தாய்

என்னை உன்னில் ஜனனிக்கச்செய்து
நீ என் தாயானாய்,
என் தலைகோதி, உன் மார்போடு
எனையணைத்தபோது
நீ என் துணையானாய்.
வெளி,காலங்களைக் கடந்து நான் பறந்தபோது
நான் உன்னில் பாதியானேன்.
நீ என்னில் பாதியானேன்.

என் காதற்பெண்ணே!
புரியவில்லைப் பெண்ணெ!
உன் புதிர்களை என்னால்
புரிந்துகொள்ளமுடியவில்லைப் பெண்ணே!
உன்னோடு கரைந்துபோன ஒவ்வொரு கணங்களும்
என்னில் ஒவ்வொரு விதையைத் தூவிச்சென்றன.

நீ விதைத்த எல்லா விதைகளும்
உருக்கொண்டு விருட்சமாகி நிற்கின்றன்.

சில பூத்திருக்கின்றன. உன்னைப்போல்
சில பூக்காமல் ஏமாற்றுகின்றன. உன்னைப்போல்
சில பூப்பதாய் சொல்கின்றன. உன்னைப்போல்
சில பூத்துவாடிவிட்டன. உன்னைப்போல்
சில பூத்தும் காய்க்காமல் விட்டன. உன்னைப்போல்
சில அன்று பூத்தன. இன்று பூக்கவில்லை. உன்னைப்போல்

நீ பேசிய வார்த்தைகள் மட்டுமல்ல,
உன் ஸ்பரிசங்களும் என்னோடுதான்,
இன்றும் வாழ்கின்றன.
உன்னைப் போல் அல்ல
ஆனால் உன்னைப் போல் தான்.

நீ என்னைக் காதலிப்பதாய்ச் சொன்னபோது
என் வார்த்தைகள் மௌனித்துப்போயின.
அதை “நீ” தவறாகப் புரிந்துகொண்டாய்.
இல்லை
உன் புரிதல் தவறாக இருந்தது.
“ நான் உன்னை நேசித்தது நிஜம்” என நவின்றபோது
உன் சந்தேகப்புயல் கொண்டு எனைத்தாக்கினாய்.
சில புனைகதைகளையும் துணைக்கிழுத்தாய்.
இருவரிதழ்களும் ஓரிதழாய் கட்டுண்டு
மௌனங்களின் பரிபாஷையில்,
என் நயனமொழிகளில் சொன்னபோது
நீ காதலை ஏற்றுக்கொண்டாய்
ஆனால் அதில் முழுமையில்லைப் பெண்ணே!
அது பூரணமில் காமத்தில் முகிழ்த்த
முடிவில்லா முடிவது.


“காமத்தைக் கடந்து செல்வோம் – அதன்பின்
காதலில் கரைந்துவிடலாம்”
என்றபோது மீண்டும்
நான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மனிதனானேன்.

- காதலில் (காதல் + இல் ) கரைந்து போகவேணுமெனில் காமவாசல் கடக்கப்படவேண்டும். காமத்தின் பின்னான காதல் தான் கால,வெளிகளைக் கடந்து உயிர்ப்பின் ஆதாரமாய் எங்கும் மலர்வது – ஒரு ரோஜாவின் அழகாய்- அழகுத்தன்மையாய் பூரணிப்பது. காமத்தின் ஊடாகக் காமத்தைக் கடந்து காதல் மலர்வதற்கு மறுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் காதலின் புனிதம் – சுகந்தம் – பூரணம் சிதைக்கப்படுகிறது. –

உனக்காகவே நான் வாழவேண்டும், முழுமையாக.
என் வாழ்நாள் முழுமைக்கும் உன்னோடு பூரணமாக.
என் மதுவெறி தொலைந்தது.
என் புகைமோகம் அடங்கியது.
என் நெறியில் ( நெறி + இல்லா) காமம் களைந்து
உன்னில் காதலாய் மலர்ந்தது.
என்னையே உனக்காக இழந்துவிட்டேன்.
இழப்பதற்கு இனியெதுவுமில்லை,
உன்னைத்தவிர.
ஆனால்
உன்னையும் இழந்துவிட்டேன்.
என் காதற்பெண்ணே!

பூவாய் வாடல்…………………

இதயத்தின் வலி எனக்குப் பூரணமாகப்
புரிகிறது பெண்ணே!
என் கண்கள் கண்ணீர் சொரிகிறது.
ஏன்…………… எனக்குப் புரியவில்லை.
ஏன்……………. என்னைப் பிடிக்கவில்லை என்றாய்.
ஏன்……………. என்னைப் வெறுக்கிறேன் என்றாய்.
புரியவில்லைப் பெண்ணே!
என் காதற்பெண்ணே!
நான் உன்னை நேசிக்கின்றேன்.
உன் வழி எவ்வழியெனிலும்
நான் உன்னை நேசிக்கின்றேன்.

என் நெஞ்சோடு மஞ்சமிட்டவள் நீ.
என் காதல்நிலைக்கு உயிரானவள் நீ.
நான் உன்னை நேசிக்கின்றேன்.
என் காயமழிந்து போயினும்
என் உயிர் உனைத்தேடியலையும் பெண்ணே!
நான் உன்னை நேசிக்கின்றேன்.


உன் சிரிப்புகள் மட்டும்தான்
எனக்கு மோட்சத்தைத் தரவல்லன.
உன்னோடு மலர்ந்த அப்பொழுதுகள்
பொய்யாய்………….
பழங்கதையாய்……………
கரைந்துபோயினும்
என்னுள்ளே என்றும் இயங்கிக்கொண்டேயிருக்கும்.

விதையாய் விரிதல்………….

நீ என் ஜீவனாய் இருப்பவள்.
நீ என் ஜோதியாய் இருப்பவள்.
நீ எனை நெறிப்படுத்திய தேவதை.
நீ எனைப் பிரிந்து சென்றதாக நான் உணரவில்லை.
நீ என்னில் கரைந்து விட்டதாகப் புரிந்திருக்கிறேன்.

என்னை இயக்கும் மாபெரும் சக்தி நீ.
உனக்காக வாழ்வதும்
உனக்காக சாவதும்
சாலச் சிறந்தது பெண்ணே!

எட்டியுதையும் போது உனக்கு வலிக்குமென்பதால்
நான் நீ உதையமுன் விழுந்தவன்.
உன் கால்களைப் பிடித்தும்
முத்தமிட விரும்பியவன்.

நீ விரும்பியபடி உனக்காக………
உன்னோடு வாழ்வதற்காய்…………
நான் வந்த போது
நீ என் அருகில் இல்லை.
நீ என் இறகுகளை வெட்டிவிட்டுப்
பறந்துவிட்டாய்!
முடியவில்லைப் பெண்ணே!
வலிக்கிறது! இதயம்.

மஞ்சமதில் கொஞ்சிவிளையாடிய என் இனியாளே!
ஏன் எனை மறந்தாய்.
புரியவில்லை என் காதற்பெண்ணே!

உன் உறவுகளுக்காய் உன்னை விட்டுக்கொடுக்கிறேன்.
உனக்காக உன்னை விட்டுக்கொடுக்கிறேன்.
ஆனால்
உன்னோடு நான் கொண்டகாதலை
என் மரணத்திற்கும் விட்டுக்கொடுக்கமாட்டேன்.

I love you sooooooooooooo much.
I will never forget you and my love
Even I be in rest.
I am loving you forever with evergreen memories.

மறப்பதும் மறக்கப்ப்டுவதும்
மரணத்தைவிடக் கொடுமையானது.

Tuesday, December 23, 2008

காலப்பதிவு_04

நீ.
எனக்குள்ளிருந்த கவிதைகளைக்
காட்டிச் சென்றவள்.
என் கரங்களில் கவிதையாகி
விழுந்தவள்.
என் விடுதலையின் வரைவிலக்கணங்களை
நான் வரைந்தபோது
அந்த எல்லைக்கோடுகளை அழித்து
விடுதலையை விடுதலை ஆக்கியவள்.

காலப்பதிவு_03

எழும்போது கடலலையாகவல்ல
சுனாமியாக எழுமின்.
அழிவின் பூரணத்தில் தான்
ஓர் அர்த்தமுள்ள ஆக்கத்தின்
துளிர்ப்பிருக்கும்.

காலப்பதிவு_02

என் சுவடுகள் வரலாற்றின் தடங்கள் அல்ல.
ஓர் இலட்சியத்தை திசைப்படுத்தி,
ஓர்மத்துடன் கடந்துசென்ற
ஓர் இலட்சிய நெருப்பின் காலப்பதிவுகள்.

காலப்பதிவு_01

என்னுடைய வெற்றியை அல்ல,
வீழ்ச்சியைக் கொண்டாட
காத்திருப்பவர்களே!
நீங்கள் நினைக்கும் என் மரணம் கூட
என் வீழ்ச்சியல்ல.

Monday, December 22, 2008

தொலைவுகளில் தொலைந்து போதல்_பற்றிய கதையாடல்

தொலைவுகளில் தொலைந்து போதல்_பற்றிய கதையாடல்


தொலைவுகளில் தொலைந்து போகிறேன்.
Tuesday, November 18, 2008 at 9:06am

தொலைவுகளில் தொலைந்து போகிறேன்.
தொலைவுகளில் தொலைவதற்காகத் தொலைந்துபோகிறேன்.
தொலைவுகளில் தொலைவுக்கான தொலைவுப்பரிமாணங்களும் தொலைந்துபோகின்றன.
தொலைதல் ஒரு ஜனனம்.
தொலைதல் ஒரு மரனம்.
தொலைதலில் இருமைகளும் தொலைந்து போகின்றன.
“தொலைந்து போ” அல்லது “சும்மா இரு”
தொலைதல் என்பது தொலைவுகளில் தொலைந்துபோவதா? இல்லை,
தொலைவுகளில் கரைந்துபோவதா?
கரையம், கரைப்பான்,கரைதல்,கரைசல்.
தொலையம்,தொலைப்பான்,தொலைதல்,தொலைசல்.
தொலைவுகளில் தொலைந்து போகிறேன்

Anandavel Gobiraj
(London) wroteat 6:08pm on November 18th, 2008

nee oru great da machan........i am really impressed which u wrote down


Sentha Selvaratnam
wrote at 7:32pm on November 18th, 2008

தொலை தூர தெரு விளக்கு
தொலைந்துபோகும்,
தொலை நோக்கி இன்னும் பயணித்தால்!
தொலைந்தது உன் சட்டத்தில்..
ஆனால்தொலை தூர தெரு விளக்கு
தொலைந்துவிடாது!!
தொலைதலும் தோன்றலும்
இயற்கையின் வட்டத்தில்..
தொலைவதேல்லாம் உன்னுடையது அல்ல
தொலைத்ததெல்லாம் உன் தப்பல்ல..
தொலைதல்.. இயற்கையினால்
தொலைக்கப்பட்ட விதி!!!



Gunaratnam Sentheepan
wrote at 9:05pm on November 18th, 2008

செந்தா தொலைவிற்கான உன் பரிமாணம் உன் பார்வைகளின் ஊடாக விரிந்த தளம் மிக உயிர்ப்பாக இருக்கிறது.
ஆனால் உன் தொலைதலில் இயற்கை தொக்கி நிற்பதால், உன் சுயம் மறைந்து போகிறது. ஏனேனில் என் தொலைதல் என் சுயம். உன் தொலைதல் உன் சுயம்.
ஆனந்தவேல் கோபிராஜ், என் தொலைவுகளின் ஊடாக நீயும் தொலைந்திருந்தால், அதே தளங்களின் நீயும் விரிந்திருந்தால் இது இப்படைப்பின் வெற்றியன்றி எனது வெற்றியல்ல நண்பா!இது எனக்கூடாக பிரசவிக்கப்பட்டது மட்டுமே.
இது ஒவ்வொரு வாசகனுக்கும் அவன்சார் தளங்களுக்கேற்ப விரிவதுதான் இதன் சுயம்- சுகந்தம்-பூரணம்



Pranavan Ramachandran
(Australia) wrote at 9:54am on November 21st, 2008
தொலைந்தது எதுவோ
தொலைத்தவர் எவ்வழியோ
வாழ்க்கையை தொலைக்க
முயன்றுதொலைந்த நிழல்தோற்றம்
உன் மெய்தொலைய
உண்மைதொடக்கம்
நீதொலைந்த தோற்றம்
தேடிதோல்வி, அல்ல......தொடர்ச்சி



Gunaratnam Sentheepan
wrote at 5:05pm on November 21st, 2008

தொலைதல்............................தொலைவுகளின் வெளியில் தொலைவதல்ல. தொலைவுகளின் வெளியும் தொலைதல் தான் தொலைதலின் பூரணம்.
உன் வரிகளின்// ...தொடர்ச்சிமிக அற்புதம் தொலைவுகளுக்கு ஆதி அந்தம் இல்லை என்பது அதில் சூத்திரமாகிறது........... சூட்சமாகிறது....................

Saturday, December 20, 2008

வாரணமாயிரம்

“வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்”
----------------- ஆண்டாள் அருளிய நாச்சியார் திருமொழி


வாரணம்(யானை , வாரணங்கள் ஆயிரம் என வரவேண்டும் யாப்பிற்காக எண் வழுவமைதி) ஆயிரம் சூழ வலம் செய்து, நாரணநம்பி ( ஆண்டாளின் மானசீகக் காதலன் மதுசூதனன்) நடக்கின்றான் என் எதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ ( தோழியின் மீதான விழிப்பு தோழீ) நான்
-------- என ஆண்டாள் சொல்வதாக அமைந்தது இச் செய்யுள்

----------------------------------------------------------------

என்னுடைய மறுவாசிப்பு,

“ஆயிரமாய் (பலவாய்) ஆண்டாளின் அறிவுத்தளம் (யானை அறிவுக்கு உருவகம், விலங்குகளின் கூரறிவுடையது யானை) வெளியெங்கும் விரிகிறது. விரிதலின் முடிவு ( இதற்கு உருவகம் நாரண நம்பி) உணர்வுகளுக்கு அருகிலேயே,எதிரிலேயே உள்ள தளத்தில், ஆனால் அந்தத் தளமும் இயங்கிக்கொண்டேயுள்ளது. பேரானந்தவெளியில் அகமிருக்க, அவள் புறமெங்கும் வெளியாய், ஆனந்தம் விரிகிறது ( அவள் அனுபவத்தை
"வார்த்தைகளில்" சொல்லவேண்டியதால் - வார்த்தைகளின் தூல தரிசனமாய்- அவளுடைய கனவுக்காதலை தோழியிடம் சொன்னாள் என்பது நேரடிப் பொருளானது, ஆனால் அவள் உலாவிய தளங்கள் வித்தியாசமானவை. அதில் அவள் பெற்ற அனுவங்கள் வித்தியாசமானவை)

ஆண்டாளின் மொழிகள் என்னைபொறுத்தவரை தாந்ரா அனுபவத்தின் உச்சம்.

தொலைவுகளில் தொலைந்து போகிறேன்.

தொலைவுகளில் தொலைந்து போகிறேன்.
தொலைவுகளில் தொலைவதற்காகத் தொலைந்து போகிறேன்.
தொலைவுகளில் தொலைவுக்கான தொலைவுப்பரிமாணங்களும்
தொலைந்து போகின்றன.
தொலைதல் ஒரு ஜனனம்.
தொலைதல் ஒரு மரணம்.
தொலைதலில் இருமைகளும் தொலைந்து போகின்றன.
“தொலைந்து போ” அல்லது “சும்மா இரு”
தொலைதல் என்பது
தொலைவுகளில் தொலைந்துபோவதா? இல்லை,
தொலைவுகளில் கரைந்துபோவதா?
கரையம், கரைப்பான்,கரைதல்,கரைசல்.
தொலையம்,தொலைப்பான்,தொலைதல்,தொலைசல்.
தொலைவுகளில் தொலைந்து போகிறேன்.
தொலைவுகளில் தொலைவதற்காகத் தொலைந்து போகிறேன்.