மறப்பதும் மறக்கப்படுவதும்
மரணத்தைவிடக் கொடுமையானது.
ஏன்………… ஏன்……….. ஏன்…………….
முத்தமிட்டாய் என்னை,
என் இதயத்தில் ஏன் முற்றமிட்டு
என்னை முத்தமிட்டாய்.
முடிவுகளைப் பரிசளித்ததாய் சந்தோஷப்படுகிறாய்.
முடிவுகள்; ஆரம்பங்கள்;
வெற்றிகள்; தோல்விகள்;
இன்பங்கள்; துன்பங்கள்;
முரண்களுக்குகப்பாலிருந்துதான்
நான் உன்னை நேசித்தேன்.
என் நினைவுகளுக்கூடாக
உன்னை நான் சீராட்டியபோதும்
என் நினைவுகளையும் விஞ்சி
உன்னை நான் காதலித்தேன்.
மலராய் மலர்தல்………………..
அந்தக் காலங்கள்…………
என் அழகிய நிலாக்காலங்கள்.
என் வனவாசம் களைந்து – என்
அஞ்ஞாதவாசமும் அஸ்தமிக்கும்
ஓர் அற்புதக் காலத்துடியிடைப் பொழுது
பெண்ணே! என் காதற்பெண்ணே!
உன்னைக் கண்டதும்
நான் என்னை உணர்ந்தேன்.
உன்னைக் கண்டதும்
நான் வெறுக்கவும் காதலிக்கவும் கற்றுக்கொண்டேன்.
உன்னைக் கண்டதும்
என் ஆன்மாவை உணர்ந்துகொண்டேன்.
அதுவரை
மதங்கொண்டலையும் வெறியனாய்,
வெறிகொண்டலையும் ஞமலியாய்,
மதுதேடியலையும் புல்லனாய்,
பித்தேறித்திரிந்த காமுகனாய்
அலைந்த என் மனம்,வாக்கு,காயம் எனும்
திரிவேணிசங்கமம்,
உன்னை ஒரு புள்ளியாக்கி
உன்னில் குவிந்தன!
என் காதற்பெண்ணே!
குவிந்தமலர்கள் மீண்டும் மலர்ந்தபோது
நான் மறுபடியும் ஜனனித்தேன்.
அர்த்தமற்றுத்தெரிந்த இஞ்ஞாலத்தின்
ஒவ்வொரு அர்த்தங்களையும் கற்றுத்தந்தாய்
என்னை உன்னில் ஜனனிக்கச்செய்து
நீ என் தாயானாய்,
என் தலைகோதி, உன் மார்போடு
எனையணைத்தபோது
நீ என் துணையானாய்.
வெளி,காலங்களைக் கடந்து நான் பறந்தபோது
நான் உன்னில் பாதியானேன்.
நீ என்னில் பாதியானேன்.
என் காதற்பெண்ணே!
புரியவில்லைப் பெண்ணெ!
உன் புதிர்களை என்னால்
புரிந்துகொள்ளமுடியவில்லைப் பெண்ணே!
உன்னோடு கரைந்துபோன ஒவ்வொரு கணங்களும்
என்னில் ஒவ்வொரு விதையைத் தூவிச்சென்றன.
நீ விதைத்த எல்லா விதைகளும்
உருக்கொண்டு விருட்சமாகி நிற்கின்றன்.
சில பூத்திருக்கின்றன. உன்னைப்போல்
சில பூக்காமல் ஏமாற்றுகின்றன. உன்னைப்போல்
சில பூப்பதாய் சொல்கின்றன. உன்னைப்போல்
சில பூத்துவாடிவிட்டன. உன்னைப்போல்
சில பூத்தும் காய்க்காமல் விட்டன. உன்னைப்போல்
சில அன்று பூத்தன. இன்று பூக்கவில்லை. உன்னைப்போல்
நீ பேசிய வார்த்தைகள் மட்டுமல்ல,
உன் ஸ்பரிசங்களும் என்னோடுதான்,
இன்றும் வாழ்கின்றன.
உன்னைப் போல் அல்ல
ஆனால் உன்னைப் போல் தான்.
நீ என்னைக் காதலிப்பதாய்ச் சொன்னபோது
என் வார்த்தைகள் மௌனித்துப்போயின.
அதை “நீ” தவறாகப் புரிந்துகொண்டாய்.
இல்லை
உன் புரிதல் தவறாக இருந்தது.
“ நான் உன்னை நேசித்தது நிஜம்” என நவின்றபோது
உன் சந்தேகப்புயல் கொண்டு எனைத்தாக்கினாய்.
சில புனைகதைகளையும் துணைக்கிழுத்தாய்.
இருவரிதழ்களும் ஓரிதழாய் கட்டுண்டு
மௌனங்களின் பரிபாஷையில்,
என் நயனமொழிகளில் சொன்னபோது
நீ காதலை ஏற்றுக்கொண்டாய்
ஆனால் அதில் முழுமையில்லைப் பெண்ணே!
அது பூரணமில் காமத்தில் முகிழ்த்த
முடிவில்லா முடிவது.
“காமத்தைக் கடந்து செல்வோம் – அதன்பின்
காதலில் கரைந்துவிடலாம்”
என்றபோது மீண்டும்
நான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மனிதனானேன்.
- காதலில் (காதல் + இல் ) கரைந்து போகவேணுமெனில் காமவாசல் கடக்கப்படவேண்டும். காமத்தின் பின்னான காதல் தான் கால,வெளிகளைக் கடந்து உயிர்ப்பின் ஆதாரமாய் எங்கும் மலர்வது – ஒரு ரோஜாவின் அழகாய்- அழகுத்தன்மையாய் பூரணிப்பது. காமத்தின் ஊடாகக் காமத்தைக் கடந்து காதல் மலர்வதற்கு மறுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் காதலின் புனிதம் – சுகந்தம் – பூரணம் சிதைக்கப்படுகிறது. –
உனக்காகவே நான் வாழவேண்டும், முழுமையாக.
என் வாழ்நாள் முழுமைக்கும் உன்னோடு பூரணமாக.
என் மதுவெறி தொலைந்தது.
என் புகைமோகம் அடங்கியது.
என் நெறியில் ( நெறி + இல்லா) காமம் களைந்து
உன்னில் காதலாய் மலர்ந்தது.
என்னையே உனக்காக இழந்துவிட்டேன்.
இழப்பதற்கு இனியெதுவுமில்லை,
உன்னைத்தவிர.
ஆனால்
உன்னையும் இழந்துவிட்டேன்.
என் காதற்பெண்ணே!
பூவாய் வாடல்…………………
இதயத்தின் வலி எனக்குப் பூரணமாகப்
புரிகிறது பெண்ணே!
என் கண்கள் கண்ணீர் சொரிகிறது.
ஏன்…………… எனக்குப் புரியவில்லை.
ஏன்……………. என்னைப் பிடிக்கவில்லை என்றாய்.
ஏன்……………. என்னைப் வெறுக்கிறேன் என்றாய்.
புரியவில்லைப் பெண்ணே!
என் காதற்பெண்ணே!
நான் உன்னை நேசிக்கின்றேன்.
உன் வழி எவ்வழியெனிலும்
நான் உன்னை நேசிக்கின்றேன்.
என் நெஞ்சோடு மஞ்சமிட்டவள் நீ.
என் காதல்நிலைக்கு உயிரானவள் நீ.
நான் உன்னை நேசிக்கின்றேன்.
என் காயமழிந்து போயினும்
என் உயிர் உனைத்தேடியலையும் பெண்ணே!
நான் உன்னை நேசிக்கின்றேன்.
உன் சிரிப்புகள் மட்டும்தான்
எனக்கு மோட்சத்தைத் தரவல்லன.
உன்னோடு மலர்ந்த அப்பொழுதுகள்
பொய்யாய்………….
பழங்கதையாய்……………
கரைந்துபோயினும்
என்னுள்ளே என்றும் இயங்கிக்கொண்டேயிருக்கும்.
விதையாய் விரிதல்………….
நீ என் ஜீவனாய் இருப்பவள்.
நீ என் ஜோதியாய் இருப்பவள்.
நீ எனை நெறிப்படுத்திய தேவதை.
நீ எனைப் பிரிந்து சென்றதாக நான் உணரவில்லை.
நீ என்னில் கரைந்து விட்டதாகப் புரிந்திருக்கிறேன்.
என்னை இயக்கும் மாபெரும் சக்தி நீ.
உனக்காக வாழ்வதும்
உனக்காக சாவதும்
சாலச் சிறந்தது பெண்ணே!
எட்டியுதையும் போது உனக்கு வலிக்குமென்பதால்
நான் நீ உதையமுன் விழுந்தவன்.
உன் கால்களைப் பிடித்தும்
முத்தமிட விரும்பியவன்.
நீ விரும்பியபடி உனக்காக………
உன்னோடு வாழ்வதற்காய்…………
நான் வந்த போது
நீ என் அருகில் இல்லை.
நீ என் இறகுகளை வெட்டிவிட்டுப்
பறந்துவிட்டாய்!
முடியவில்லைப் பெண்ணே!
வலிக்கிறது! இதயம்.
மஞ்சமதில் கொஞ்சிவிளையாடிய என் இனியாளே!
ஏன் எனை மறந்தாய்.
புரியவில்லை என் காதற்பெண்ணே!
உன் உறவுகளுக்காய் உன்னை விட்டுக்கொடுக்கிறேன்.
உனக்காக உன்னை விட்டுக்கொடுக்கிறேன்.
ஆனால்
உன்னோடு நான் கொண்டகாதலை
என் மரணத்திற்கும் விட்டுக்கொடுக்கமாட்டேன்.
I love you sooooooooooooo much.
I will never forget you and my love
Even I be in rest.
I am loving you forever with evergreen memories.
மறப்பதும் மறக்கப்ப்டுவதும்
மரணத்தைவிடக் கொடுமையானது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மிக மிக மிக அற்புதமான கவிதை.மீண்டும் மீண்டும் படிக்க வைக்கிறது
Post a Comment