Thursday, July 30, 2009

முத்தம்

மோட்சங்களைத் தரும்
காதல்வேதத்தின்
அற்புத மந்திரம்

இதயத்தின் வலிக்கு
மருந்திடும்
உதடுகளின் ஸ்பரிசம்

கட்டியணைத்தபடி
காது கடிக்கும்
மோகமுள்

மயிர் கூச்செறியும்
கணநேர நொடிகளின்
தாண்டவம்

கண் மூடவைக்கும்
உதட்டிடை நரம்புகளை
கண்டறியும் ஆய்வு

நாக்குடன் நாக்கு
சண்டையிடும்
சமர்க்களம்

காலத்தைச் சுருக்கி
காலியாக்கும்
தத்துவம்

முடிவில்லாத் தேடல்களுக்கு
முகவரியிடும்
உபநிடதங்கள்

காமத்தையே
காதலாக்கும்
தாந்ராவின் ரகசியம்

காதலால்
உலகளக்கும்
வாமணம்

காதலின் தளங்களை முத்தமிட்டு

முத்தத்தின் குளிர்ச்சியில்
மௌனமாய் நான் கரைகிறேன்.

கசிந்து மெல்லென
பிரவாகமெடுக்கும் - அவள்
நயனமொழிகளின் ஊடாக
என் இதயநாண்களின் அதிர்வுகளாய்
அவள் பிரபஞ்சநடனங்கள்
காதலின் சுயமாய்……………
நாதமாய்………………..
மிதக்கிறது.

வாட்டும் பாலையாய்
அவளில்லா நீள்பொழுதுகள்
என்
காற்றொதுக்குப் பக்கங்களில்
நெடுங்கவிதையாய்
ஆயிரம் நினைவுகளைத்
தூவிச் செல்கின்றன.

எங்கிருந்தோ சில
பிம்பங்கள் அவள் நினைவுகளாய்..

இல்லை.
அவை நினைவுகள் இல்லை.
அவள் புன்னகையில்
நினைவுகளாகிய நிஜங்கள்.

இல்லை.
அவள் என்னருகே
எப்போதுமே இருப்பதேயான
ஒரு சுயம்.

இல்லை
என் மேனியெங்கும்
அவள் உதடுபட்ட
எச்சிலின் ஈரம்.

ஆம் அவள் என் காலங்களைக் கடந்த
காலி! என் காதலி.

அவள் தம்
காதலின் தளங்களை முத்தமிட்டு
மெல்லக் கரைகிறேன் காதலில்.

Thursday, July 23, 2009

விரிந்து செல்லும் அதிர்தளங்கள்

விரிந்து செல்லும் கால – சக்திச் சமன்பாட்டின்
E = m C2
முப்பரிமானவெளி, காலப் பரிமாணங்களைக்
கடந்து ஒளியின் வேகத்தை விஞ்சுகையில்
என் திணிவின் அழிப்பினூடான சக்திமாற்றம்
பல அதிர்தளங்களை
அண்டெமெங்கும் சிருஷ்டிக்கின்றது.

என் தூல இருப்பின் பூரண கரைதல்
சக்தியாய் வியாபிக்கும் சூட்சுமவெளியின்
பூரணம் நாதமாய் மிதக்கையில்
மனமெனும் பரிமாணத்தளத்தில்
ஆனந்தவெளியாய் விரிகிறது.

வெளி நேர விகிதம் - பல
ஒளி வேக மடங்குகளாய் விரிகையில்
வெளி காலத் தளங்கள்
ஒரு சூனியத்தின் மையச்சுழியமாய்
ஓர் சுழலும் மனோலயத்தின் அக புறவிரிவாய்
மீண்டும்
புதிய அதிர்தளத்தின் சிருஷ்டிப்பு.

கோடுகள் விரிகின்றன. அதிர்கின்றன.
மூன்று கோடுகள் அந்தம் பற்றி இணைகின்றன.
அதன் உச்சிகளின் ஊடாக வட்டமொன்றாய்
இரு பரிமாண அதிர்தளம் விரிகிறது.
கோடுகளின் விரிவு பல்கோணியாக
கோடுகளின் நீட்சி காலவெளியாய் விரிகையில்
இரு பரிமாண அதிர்தளம்
அதன் மையம் பற்றி பூரணமாய் வெளியெங்கும் விரிகிறது.

விரியும் இரு பரிமாணத்தளம்
அதன் மையத்தினூடான எண்ணிறை அச்சுகள் பற்றி
அதிர்வுகளை நிகழ்த்த
அதிர்வுகளின் வீச்சங்கள் காலவெளியாய் வியாபிக்க
முப்பரிமாணவெளியின் சிருஷ்டிப்பு.

முப்பரிமாணவெளியின் அதிர் அச்சுகளின் மையமும்
பல் விரி அதிர்வுகளை நிகழ்த்த
அதிர்வுகள் வெளி – கால பரிமாண விரிவாய்
காலப்பரிமாணவெளியின் சிருஷ்டிப்பு.

விரியும் தளங்களின் அதிர்வுகளாய்
பேரண்டம் விரிகிறது.
அதிர்வுகளின் நாதமாய்
சக்திவெளி விரிகிறது.

விரிதலும் கரைதலும்
ஒர் செயலாய் வியாபித்து
விரிதலும் கரைதலும்
கரைதலில் விரிதலாகவும்
விரிதலில் கரைதலாகவும்
வியாபிக்கின்றது வெளியெங்கும்.

எண்ணிறைதளங்களில்
ஆனந்த தாண்டவம்.
நாதலயங்களாய் ஆனந்தவிரிவுகள்.
இருப்பேயற்ற
இருத்தலின் விரிவுகள்.
சூனியமாய்ப் பூரணமும்
பூரணமாய் சூனியமும்
விரிகின்றன. அதிர்கின்றன.

விரிவே அதிர்கின்றது.
அதிர்வே விரிகின்றது.
இதுவே படைப்பாய் விரிகின்றது………………………

Monday, July 20, 2009

படைப்பின் தத்துவம்

எண்ணில் பெருவெளியென விரியும்
ஓர் காலத்துடியிடை மின்னற்கசிவின்
துடியிடை காலியின் பின்னமுள்
சூத்திரமாய்; சூட்சமாய்; தூலமாய் தாண்டவம்.
அந்நிகழ்வெளியின் ரசபாவ விரிநிலையில்
வெளியாய் வியாபிக்கும் படைப்பின் தத்துவம்

காலவெளி

காலி வெளியிடை காலத்துடியில் கணத்தில்
பளிச்சிடும் மின்னற்கீற்றின் ஒரு சிறுமுறிவின்
சக்திபின்னமாய் பீறிடும் ஒர் நாதம்
மௌனமாய் வெளியெங்கும் வியாபிக்கையில்
ஒரு சிறுபொறிவின் மரணமாய் பூரணமாய்
சிருஷ்டிப்பின் தத்துவம் மெல்ல நடமிடும்
பொழுதாய் விரிகிறது காலவெளி.

பேரன்னைக்காய் விரியும் மௌன நாத நினைவு வெளி


எம் இதய அதிர்வுகளின் நாதங்களின் மூலமாய்
வேய்ங்குழலிசையாய் வெளியெங்கும் வியாபிக்கும்
எம்மினிய அன்னையே!
நீ மரணித்தவள் அல்ல!
எம் ஆத்மாவின் ஆழங்களில் மீள ஜனனித்தவள்.

காலவெளியிடை உன் நினைவுகள்
கரைந்தழிந்து போகா நிகழ்காலவெளியாய்
விரியும் பேரன்னையே!
நின் அருட்பேராற்றல் என்றும்
நிலைபெறும் களமாய் விரிகிறது எம் வாழ்க்கை.

தாயே! சரணம் உன் கருணைக்கு
தாயே! சரணம் உன் அன்புக்கு
தாயே! சரணம் உன் பேரியக்கத்திற்கு
தாயே! சரணம் உன் பாதங்களுக்கு

அன்பு வெளியாய் விரிந்தாய் நீ.
ஆற்றல் களனாய் விரிந்தாய் நீ.
நாத சிருஷ்டிப்பாய் விரிந்தாய் நீ.

எங்கும் எதிலும் நிறை தேவியே!
எம் அன்னையே! சரணம்.சரணம் தாயே!

எம் மறையாத மறையே சரணம்.சரணம் தாயே!