Thursday, July 30, 2009

காதலின் தளங்களை முத்தமிட்டு

முத்தத்தின் குளிர்ச்சியில்
மௌனமாய் நான் கரைகிறேன்.

கசிந்து மெல்லென
பிரவாகமெடுக்கும் - அவள்
நயனமொழிகளின் ஊடாக
என் இதயநாண்களின் அதிர்வுகளாய்
அவள் பிரபஞ்சநடனங்கள்
காதலின் சுயமாய்……………
நாதமாய்………………..
மிதக்கிறது.

வாட்டும் பாலையாய்
அவளில்லா நீள்பொழுதுகள்
என்
காற்றொதுக்குப் பக்கங்களில்
நெடுங்கவிதையாய்
ஆயிரம் நினைவுகளைத்
தூவிச் செல்கின்றன.

எங்கிருந்தோ சில
பிம்பங்கள் அவள் நினைவுகளாய்..

இல்லை.
அவை நினைவுகள் இல்லை.
அவள் புன்னகையில்
நினைவுகளாகிய நிஜங்கள்.

இல்லை.
அவள் என்னருகே
எப்போதுமே இருப்பதேயான
ஒரு சுயம்.

இல்லை
என் மேனியெங்கும்
அவள் உதடுபட்ட
எச்சிலின் ஈரம்.

ஆம் அவள் என் காலங்களைக் கடந்த
காலி! என் காதலி.

அவள் தம்
காதலின் தளங்களை முத்தமிட்டு
மெல்லக் கரைகிறேன் காதலில்.

1 comment:

Muruganandan M.K. said...

"...வாட்டும் பாலையாய்
அவளில்லா நீள்பொழுதுகள்
என்
காற்றொதுக்குப் பக்கங்களில்.." அருமையான வரிகள்