விரிந்து செல்லும் கால – சக்திச் சமன்பாட்டின்
E = m C2
முப்பரிமானவெளி, காலப் பரிமாணங்களைக்
கடந்து ஒளியின் வேகத்தை விஞ்சுகையில்
என் திணிவின் அழிப்பினூடான சக்திமாற்றம்
பல அதிர்தளங்களை
அண்டெமெங்கும் சிருஷ்டிக்கின்றது.
என் தூல இருப்பின் பூரண கரைதல்
சக்தியாய் வியாபிக்கும் சூட்சுமவெளியின்
பூரணம் நாதமாய் மிதக்கையில்
மனமெனும் பரிமாணத்தளத்தில்
ஆனந்தவெளியாய் விரிகிறது.
வெளி நேர விகிதம் - பல
ஒளி வேக மடங்குகளாய் விரிகையில்
வெளி காலத் தளங்கள்
ஒரு சூனியத்தின் மையச்சுழியமாய்
ஓர் சுழலும் மனோலயத்தின் அக புறவிரிவாய்
மீண்டும்
புதிய அதிர்தளத்தின் சிருஷ்டிப்பு.
கோடுகள் விரிகின்றன. அதிர்கின்றன.
மூன்று கோடுகள் அந்தம் பற்றி இணைகின்றன.
அதன் உச்சிகளின் ஊடாக வட்டமொன்றாய்
இரு பரிமாண அதிர்தளம் விரிகிறது.
கோடுகளின் விரிவு பல்கோணியாக
கோடுகளின் நீட்சி காலவெளியாய் விரிகையில்
இரு பரிமாண அதிர்தளம்
அதன் மையம் பற்றி பூரணமாய் வெளியெங்கும் விரிகிறது.
விரியும் இரு பரிமாணத்தளம்
அதன் மையத்தினூடான எண்ணிறை அச்சுகள் பற்றி
அதிர்வுகளை நிகழ்த்த
அதிர்வுகளின் வீச்சங்கள் காலவெளியாய் வியாபிக்க
முப்பரிமாணவெளியின் சிருஷ்டிப்பு.
முப்பரிமாணவெளியின் அதிர் அச்சுகளின் மையமும்
பல் விரி அதிர்வுகளை நிகழ்த்த
அதிர்வுகள் வெளி – கால பரிமாண விரிவாய்
காலப்பரிமாணவெளியின் சிருஷ்டிப்பு.
விரியும் தளங்களின் அதிர்வுகளாய்
பேரண்டம் விரிகிறது.
அதிர்வுகளின் நாதமாய்
சக்திவெளி விரிகிறது.
விரிதலும் கரைதலும்
ஒர் செயலாய் வியாபித்து
விரிதலும் கரைதலும்
கரைதலில் விரிதலாகவும்
விரிதலில் கரைதலாகவும்
வியாபிக்கின்றது வெளியெங்கும்.
எண்ணிறைதளங்களில்
ஆனந்த தாண்டவம்.
நாதலயங்களாய் ஆனந்தவிரிவுகள்.
இருப்பேயற்ற
இருத்தலின் விரிவுகள்.
சூனியமாய்ப் பூரணமும்
பூரணமாய் சூனியமும்
விரிகின்றன. அதிர்கின்றன.
விரிவே அதிர்கின்றது.
அதிர்வே விரிகின்றது.
இதுவே படைப்பாய் விரிகின்றது………………………
Thursday, July 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment